எட்டு திக்கும் 'திராவிட மாடல்'! மபி-யில் பெண்களுக்கு ரூ1,500, விவசாய கடன் தள்ளுபடி- காங். வாக்குறுதி!
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்களுக்கு மாதம் ரூ1,500 உதவித் தொகை; விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என அக்கட்சியில் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உறுதி அளித்துள்ளார்.
மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் இறுதி அல்லது டிசம்பரில் நடைபெற உள்ளது. 2018-ம் ஆண்டு மத்திய பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வென்று ஆட்சியை கைப்பற்றியது. முதல்வராக கமல்நாத் பதவி வகித்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்யா சிந்தியா உள்ளிட்ட எம்.எல்.ஏக்களை பாஜக வளைத்துப் போட்டது. இதனால் முதல்வர் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்து சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி அமைந்தது.

மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் தொடர்பான பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாஜகவுக்கு எதிராகவே உள்ளன. இம்மாநிலத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது பொதுவான கருத்து கணிப்பு முடிவுகள். இருந்த போதும் சில கருத்து கணிப்புகள், ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் சமமான இடங்களைப் பெறக் கூடும் எனவும் தெரிவித்துள்ளன. இதனால் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகளுமே ஆட்சியை குறிவைத்து தீவிர தேர்தல் பணியாற்றி வருகின்றன. ம.பி.யில் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்குவது காங்கிரஸுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் புந்தல்காண்ட் பகுதி சாகரில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசியதாவது: நாட்டின் அரசியல் சாசனத்தை சில சக்திகள் மாற்ற முயற்சிக்கின்றன. அரசியல் சாசனத்தை அவ்வளவு எளிதாக மாற்ற முடியாது. நாட்டின் 140 கோடி மக்களும் அரசியல் சாசனத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக உள்ளனர்.
நாட்டின் பிரதமராக 9 ஆண்டுகள் மோடி பதவி வகித்துள்ளார். மத்திய பிரத்ஏச முதல்வராக 18 ஆண்டுகள் சிவராஜ்சிங் சவுகான் பதவி வகிக்கிறார். ஆனால் தலித் மக்களுக்கு எதுவுமே செய்யவில்லை.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த உடன், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். ராகுல் காந்தியின் பரிந்துரையின் பேரில் புந்தல்காண்ட் பகுதிக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதை பாஜக அரசு நடைமுறைப்படுத்தவில்லை.
மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் பெண்களுக்கு ரூ1,500 உதவித் தொகை வழங்கப்படும். 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்குவோம். சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ500க்கு விற்பனை செய்யப்படும். விவசாயிகள் பெற்றுள்ள கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்களு9க்கு பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும். இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.
தமிழ்நாட்டில் திமுக தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு ரூ1,500 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தது. வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல் இத்திட்டம் அமலாக உள்ளது. திமுகவின் இந்த வாக்குறுதியை பின்பற்றி கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாக முன்வைத்தது. தற்போது மத்திய பிரதேசத்திலும் அதே வாக்குறுதியை வழங்கி உள்ளது காங்கிரஸ்.












Click it and Unblock the Notifications