இஸ்லாமிய மதரசாக்களை பள்ளிக்கூடங்களாக ஏற்க முடியாது: மகாராஷ்டிர அமைச்சர்
டெல்லி: அடிப்படை கல்வியை கற்றுத்தராவிட்டால் மதரசாக்கள், பள்ளிக்கூடங்களாக கருதப்படாது என்றும், கணிதம், ஆங்கிலம் போன்ற பாடங்களை மதரசாக்கள் கற்றுத்தர வேண்டியது அவசியம் என்றும் மகாராஷ்டிர மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் ஏக்னாத் காட்சே கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது: மகாராஷ்டிராவில் பள்ளிக் கல்வி பயிலாத சிறுவர்களை கணக்கெடுக்க உள்ளோம். ஆனால் இஸ்லாமிய மதரசாக்களில் கணிதம், ஆங்கிலம் போன்ற அடிப்படை பாடங்களை கற்றுத்தராவிட்டால் அவை பள்ளியாக கணக்கில் எடுக்கப்படாது. அங்கு பயிலும் மாணாக்கர்களை, பள்ளி கல்வியை பாதியில் விட்டவர்கள் என்றுதான் கணக்கில் எடுப்போம்.

மதரசாக்கள், கல்வி கூடமாக செயல்படவில்லை. அவை மத கல்வியை போதிக்கும் மையங்களாக செயல்படுகின்றன. எனவே, ஆங்கிலம், கணிதம் போன்ற அடிப்படை கல்வியையும் போதிக்க மதரசாக்கள் முன்வந்தால், அவை பள்ளியாக கணக்கில் கொள்ளப்படும்.
இந்திய அரசியலமைப்பு சட்டம் அனைவருக்கும் கல்வி கற்கும் உரிமையை வழங்கியுள்ளது. இதை மதரசாக்கள் மறுத்து வருகின்றன. ஒரு இந்து அல்லது கிறிஸ்தவ குழந்தை, மதரசாவில் படிக்க விரும்பினால், அங்கு படிக்க வாய்ப்பு இருக்காது. எனவே அதை எப்படி பள்ளியாக கருத முடியும்.
சிறுபான்மை மக்களின் குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே மகாராஷ்டிர அரசு இதை சொல்கிறது. சிறுபான்மையினத்தவர் மக்களும் நன்கு கல்வி கற்று, நல்ல வேலைக்கு சென்று, வாழ்க்கையில் வளமோடு வாழ வேண்டும். இவ்வாறு அமைச்சர் ஏக்நாத் காட்சே தெரிவித்தார்.
இதனிடையே, அமைச்சரின் கருத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரம், பாஜகவோ, காங். தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த விதிமுறைகள்தான் இந்த குழப்பத்துக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications