பாஜக எம்.ஏ.ஏக்களை வைத்து அமித்ஷாவிடம் 'மாஸ் காட்டிய' எடியூரப்பா.. கர்நாடக தலைவராக காய் நகர்த்தல்!
பெங்களூரு: பாஜக தேசிய துணை தலைவராக உள்ள கர்நாடக முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மீண்டும் மாநில அரசியலில் தீவிரமாக ஈடுபட விருப்பம் தெரிவித்துள்ளார். எடியூரப்பாவை கர்நாடக மாநில பாஜக தலைவராக்கும்படி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவிடம், அவரது ஆதரவு எம்.எல்.ஏக்கள் குழு கடிதம் அளித்துள்ளது.
கர்நாடக பாஜகவில் செல்வாக்குமிக்க தலைவர் பி.எஸ்.எடியூரப்பாவாகும். 2009 சட்டசபை பொதுத் தேர்தலில் பாஜகவை கர்நாடகாவில் அரியணை ஏற்றி, முதல்வராக பதவிக்கு வந்தார். ஆனால், எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, உள்கட்சியிலேயே இருந்த விரோதிகளால், அவருக்கு கடும் நெருக்கடிகள் தரப்பட்டன. அடுத்தடுத்து அவர் மீது பல ஊழல் புகார்களை சுமத்தி, நெருக்கடியிலேயே வைத்திருந்தனர்.

பாஜகவை விட்டு விலகல்
இதையடுத்து மூன்றரை ஆண்டுகாலமே முதல்வராக பதவி வகித்த அவரை கட்சி மேலிடம், பதவி விலக சொல்லியது. கோபமடைந்த எடியூரப்பா, தனிக்கட்சி ஆரம்பித்து, வாக்குகளை பிரித்து, அடுத்த பொதுத்தேர்தலில் பாஜகவை எதிர்க்கட்சியாகவும் வரவிடாமல் செய்தார். எடியூரப்பாவின் முக்கியத்துவத்தை அறிந்த, பாஜக மேலிடம் மீண்டும் அவரை கட்சியில் இணைத்துக் கொண்டது.

புகார்கள் டிஸ்மிஸ்
இதனிடையே, கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடந்துவந்தாலும், எடியூரப்பா மீதான பல்வேறு புகார்களுக்கு ஆதாரம் இல்லாததால் ஒன்றன்பின் ஒன்றாக கோர்ட்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டு வருகிறது. இதையடுத்து மோடி அரசு அமைந்ததும், அமித்ஷா தலைமையிலான புதிய பாஜக நிர்வாகிகள் பதவிக்கு வந்தனர். அப்போது எடியூரப்பாவுக்கு தேசிய துணை தலைவர் பதவி அளிக்கப்பட்டது.

பாஜகவுக்கு மாஸ் தலைவர் தேவை
தேசிய துணை தலைவர் பதவி அளித்ததன் காரணமாக, டெல்லியிலேயே பெரும்பாலும் தங்க வேண்டிய நிலை எடியூரப்பாவுக்கு. இதனால் கர்நாடகாவில் கட்சியை வளர்க்க முடியாத நிலை உள்ளது. எடியூரப்பாவை தவிர்த்தால், மக்கள் ஆதரவு கொண்ட தலைவர் யாருமே பாஜகவில் இல்லை. ஜெகதீஷ் ஷெட்டர், சதானந்தகவுடா போன்றோர் ஒரு குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டுமே செல்வாக்கு கொண்டவர்களாகும். ஆனால், எடியூரப்பாவுக்கு மாநிலம் முழுவதும் நல்ல செல்வாக்கு உள்ளது.

அடுத்த முதல்வர் எடியூரப்பா
சித்தராமையா போன்ற வலுவான மக்கள் ஆதரவு தலைவரை கொண்ட காங்கிரசை, 2018 சட்டசபை தேர்தலில் எதிர்க்க, இப்போதிருந்தே எடியூரப்பா தலைமையில் பாஜக தயாராக வேண்டும் என்பது, கர்நாடக மாநில பாஜக நிர்வாகிகள் பலரின் கருத்தாக உள்ளது. மேலும், எடியூரப்பாவுக்கும், அதுவே விருப்பமாக உள்ளது. மாநிலத்தில் செல்வாக்கை காண்பித்தால்தான், ஆட்சியை பிடித்து முதல்வராக முடியும் என்பது எடியூரப்பா எண்ணம்.

பாதி எம்.எல்.ஏக்கள் பலம்
இந்நிலையில்தான், தேசிய செயற்குழு கூட்டத்திற்காக, பெங்களூரு வந்த அமித்ஷாவை, ராஜ்யசபா பாஜக எம்.பியான பிரபாகர் கோரே தலைமையில் சுமார் 20 எம்.எல்.ஏக்கள் கொண்ட குழு சந்தித்து, எடியூரப்பாவை மீண்டும் கர்நாடக பாஜக தலைவராக நியமிக்க வேண்டும் என்று மனு அளித்துள்ளது. கர்நாடக சட்டசபையில் பாஜக கொண்டுள்ள எம்.எல்.ஏக்கள் பலத்தில், பாதி தனக்குதான் ஆதரவு அளிப்பதை, இந்த 20 பேர், குழு மூலம் மேலிடத்திற்கு நிரூபித்து காண்பித்துள்ளார் எடியூரப்பா.

அமித்ஷா பரிசீலனை
இந்த குழு அளித்த மனுவில், கர்நாடகாவில் பாஜகவை வளர்க்க வேண்டுமானால், எடியூரப்பாவை தவிர வேறு மக்கள் செல்வாக்கு உள்ள தலைவர் கிடையாது. எனவே 2018 பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு எடியூரப்பாவை மாநில தலைவராக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பரிசீலிப்பதாக அமித்ஷா தெரிவித்துள்ளார்.

காய் நகர்த்தல்
தற்போது பாஜக தலைவராக உள்ள பிரகலாத் ஜோஷியின் பதவிக்காலம், அடுத்த ஆண்டுதான் முடிவடைய உள்ளது என்றபோதிலும், இப்போதிருந்தே காய் நகர்த்த ஆரம்பித்துவிட்டனர் எடியூரப்பா ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications