'அறிவிக்கப்பட்ட குற்றவாளி'.. கோர்ட் உத்தரவு! மல்லையாவுக்கு நெருக்கடி அதிகரிப்பு
மும்பை: தொழிலதிபர் விஜய் மல்லையாவை அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக மும்பையிலுள்ள சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணைக்கான சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்று தற்போது இங்கிலாந்தில் தலைமறைவு வாழ்க்கை நடத்திவருகிறார் தொழிலதிபர் விஜய் மல்லையா.
பல முறை சம்மன் அனுப்பியும் கோர்ட் விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், ரூ.1411 கோடி மதிப்புள்ள மல்லையாவின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கி சமீபத்தில் அறிவித்தது.

இதனால் ஷாக்-ஆன மல்லையா, சொத்துக்களை மடக்கினால் நான் எப்படி பணத்தை திருப்பி தர முடியும். அது பணத்தை திரட்டுவதில் சிக்கலை அதிகரித்துவிடும் என்று கூறியிருந்தார்.
ஆனால், அமலாக்கத்துறை நடவடிக்கையை முன்கூட்டியே கணித்து, குடகிலுள்ள சொத்துக்களை அவசரமாக அவர் விற்பனை செய்துவிட்டார். இதேபோன்ற விற்பனை நடவடிக்கையை மல்லையா மேற்கொண்டு லண்டனிலேயே செட்டிலாக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், மும்பையிலுள்ள சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றம், மல்லையாவை, அறிவிக்கப்பட்ட குற்றவாளி என்று இன்று அறிவித்துள்ளது. அமலாக்கத்துறை கோரிக்கையை ஏற்று இந்த உத்தரவை கோர்ட் பிறப்பித்தது. இதன்மூலம், அவரை எங்கு வைத்து வேண்டுமானாலும் கைது செய்ய காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது.
கோர்ட் உத்தரவை காரணம் காட்டி, இங்கிலாந்தில் இருந்து மல்லையாவை, இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட கோர உள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தன.
மல்லையா தனது சொத்துக்களை விற்பனை செய்வதும் கோர்ட் உத்தரவு மூலம், தடுக்கப்பட்டுள்ளது. மல்லையா மீது நெருக்கடி அதிகரித்துக்கொண்டே செல்வதால் அவர் மும்பையில் நடைபெறும் விசாரணைக்கு ஆஜராக வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
