மஹூவா மொய்த்ரா, யூசுப் பதான் திரிணாமுல் காங். சார்பில் போட்டி.. வேட்பாளர் லிஸ்ட்டை வெளியிட்டார் மமதா
கொல்கத்தா: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டிருக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜி பட்டியலை வெளியிட்டிருக்கிறார்.
எதிர் வரும் லோக்சபா தேர்தலில் 42 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து களம் காண்கிறார்கள். இதில், முன்னாள் எம்பி மஹூவா மொய்த்ராவின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. இவர் நாடாளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்ப பணம் பெற்ற குற்றச்சாட்டில் சமீபத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தார். இவர் மீது பாஜகவினர் கடும் விமர்சனங்களை அடுக்கியுள்ள நிலையில், தற்போது இவரது பெயர், வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இவர் கிருஷ்ணாநகர் தொகுதியிலிருந்து போட்டியிடுகிறார். ஏற்கெனவே இந்த தொகுதியிலிருந்துதான் அவர் போட்டியிட்டிருந்தார்.

அதேபோல முன்னாள் கிரிக்கெட் வீரர் யூசுப் பதான் பஹராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சார்பில் விளையாடி இருக்கிறார். இந்த அணி ஐபிஎல்-ல் இரண்டு முறை கோப்பையை வென்றிருக்கிறது. அப்போது மமதா பானர்ஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றிருந்தார். இந்நிலையில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் களமிறக்கப்பட்டிருக்கிறார். ஆனால், பஹராம்பூர் தொகுதி காங்கிரஸ் மூத்த தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் கோட்டையாகும்.
அதேபோல, மமதா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜிக்கும் இந்த முறை வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பாலிவுட் மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா அசன்சோல் தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அபிஷேக் பானர்ஜி, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக சாடினார். மோடியின் கேரண்டி 'பூஜ்ஜிய' உத்தரவாதத்தை கொண்டிருக்கிறது என்றும், பாஜக தலைவர்கள் மேற்கு வங்கத்திற்கு எதிரானவர்கள் என்றும் விமர்சித்திருந்தார். மேற்கு வங்க மாநிலத்திற்கு வர வேண்டிய நிதியை மோடி அரசு நிறுத்தியதாக குற்றம்சாட்டிய அவர், தேர்தல் நெருங்கும் நேரத்தில் மட்டுமே பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் மேற்கு வங்கத்திற்கு வருகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் 'இந்தியா கூட்டணியில்' அங்கம் வகித்தாலும், மேற்கு வங்கத்தில் தனித்து போட்டியிடப்போவதாக மமதா பானர்ஜி அறிவித்திருந்தார். இம்மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரசுக்கு எதிராக பாஜக மட்டுமல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் களம் இறங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications