முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது.. மம்தா பானர்ஜி முடிவால் பரபரப்பு.. அடுத்த பெரிய பிளான்?
கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபை தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்ட தொகுதியில் தோற்றார். அதோடு அவரது கட்சியும் பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என்று மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். இதனால் மேற்கு வங்கத்தில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை போல் மேற்கு வங்கத்திலும் நேற்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியானது. மேற்கு வங்கத்தை பொறுத்தமட்டில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு மொத்தம் 147 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.
நேற்றைய ரிசல்ட்டில் பாஜக அமோக வெற்றி பெற்றது. பாஜக மொத்தம் 207 தொகுதிகளில் வெற்றி பெற்றது. முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 2 தொகுதிகளிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும், மற்றவர்கள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.

மேலும் மம்தா பானர்ஜியும் தோற்கடித்தார். அவர் பாபனிபூர் தொகுதியில் போட்டியிட்டார். மம்தா பானர்ஜி மொத்தம் 58,812 ஓட்டுகள் வாங்கினார்.பாஜகவின் சுவேந்து அதிகாரி 73,917 வாக்குகள் வாங்கி மம்தா பானர்ஜியை 15,105 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். இது மம்தா பானர்ஜி உள்பட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் ஷாக்கை கொடுத்தது.
இதன்மூலம் மேற்கு வங்கத்தில் கடந்த 2011, 2016, 2021 என்று 3 தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று முதல்வராக இருந்த மம்தா பானர்ஜியின் ஆட்சிக்கு முடிவு கட்டப்பட்டது. அதோடு மேற்கு வங்க வரலாற்றில் முதல் முறையாக பாஜக ஆட்சியை கைப்பற்றி உள்ளது. இந்நிலையில் தான் பாஜக தேர்தலில் முறைகேடு செய்து வென்றதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.
அதுமட்டுமின்றி சட்டசபை தேர்தலில் ஆளும் கட்சி தோற்கும்போது முதல்வர் உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்வார். இதற்கான கடிதத்தை ஆளுநரை சந்தித்து வழங்குவார். தேர்தல் ரிசல்ட் வெளியான நாள் அல்லது ரிசல்ட் வெளியான மறுநாள் இது நடக்கும். புதியவர்கள் ஆட்சியை அமைக்கும் வகையில் இந்த ராஜினாமா கடிதம் வழங்கப்படும். தமிழகத்தில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திடம் தோற்ற முதல்வர் முக ஸ்டாலின் இன்று ராஜினாமா கடிதம் வழங்கிய நிலையில் மம்தா பானர்ஜி தனது பதவியை ராஜினாமா செய்ய போவது இல்லை என்று அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது: ''நான் ராஜினாமா செய்ய மாட்டேன். ராஜினாமா கடிதம் கொடுப்பதற்காக நான் ராஜ்பவனுக்கு செல்ல மாட்டேன். ராஜ்பவனுக்கு செல்வேனா? என்ற கேள்விக்கே இடமில்லை. ஏனென்றால் நாங்கள் தேர்தலில் தோற்கவில்லை. இது மக்களின் தீர்ப்பு இல்லை.
தேர்தல் ஆணையம் வழியாக அவர்கள் (பாஜக) அதிகாரபூர்வமாக எங்களைத் தோற்கடித்திருக்கலாம். ஆனால் தார்மீக ரீதியாக நாங்கள் வெற்றி பெற்றோம். தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது. இதனால் தான் நான் பதவி விலகபோவது இல்லை. நாங்கள் அரசியல் மற்றும் சட்ட ரீதியான பலமுனை பதிலடி கொடுப்போம்'' என ஆக்ரோஷமாக தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய மறுப்பது மேற்கு வங்கத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் மேற்கு வங்க மாநில சட்டசபையின் பதவிக்காலம் மே 6ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. அதன்பிறகு மே 9 ம்தேதி ரவீந்திரநாத் தாகூர் பிறந்தநாள் வருகிறது. அன்றைய தினம் பாஜக சார்பில் புதிய முதல்வர் பதவியேற்க திட்டமிடப்பட்டு வருகிறது. இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்றாலும் கூட ரவீந்திராத் பிறந்தநாளை குறிவைத்து பாஜக புதிய அரசை தொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மறுப்பதால் அடுத்து அங்கு என்ன நடக்கும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. அதன்படி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தேர்தல் சார்ந்த மனுக்களை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது. இருப்பினும் கூட முதல்வர் பதவியில் தொடர முடியாது. ஏனென்றால் தேர்தல் முடிவு வெளியாகி கட்சியும், அவரும் தோற்றதாக அறிவிக்கப்பட பிறகு அவரால் முதல்வர் பதவியில் தொடர முடியாது. புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராக வேண்டுமானால் செயல்படலாம். அதுவும் புதிய அரசு அமையும் வரை தான் மட்டுமே செல்லுபடியாகும்.
இதனால் ம்தா பானர்ஜி தற்போது பாஜக மீதான கோபம், விரக்தியில் இப்படி சொன்னாலும் கூட விரைவில் அவர் ராஜினாமா செய்வார் என்று சொல்லப்படுகிறது. இல்லாவிட்டால் மம்தா பானர்ஜி கட்டாயம் ராஜினாமா செய்ய ஆளுநர், நீதிமன்றம் தலையிட வாய்ப்புள்ளது. மேலும் இந்த தேர்தல் தோல்வியை மம்தா பானர்ஜி சாதாரணமாக விடமாட்டார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து அவர் பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்துக்கு எதிரான செயல்பாட்டை தொடங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications