என்னது நானா? அமித் ஷாவுடன் போனில் பேசியதை நிரூபித்தால் பதவி விலகுவேன்.. மம்தா பானர்ஜி ஆவேசம்!
கொல்கத்தா : மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் தான் போனில் பேசியதை நிரூபித்தால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என மேற்கு வங்க முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டிருந்த தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை தேர்தல் ஆணையம் சமீபத்தில் திரும்பப் பெற்றது. திரிணாமுல் காங்கிரஸ் தேசியக் கட்சி அந்தஸ்தை இழந்ததை தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை மம்தா பானர்ஜி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கூறியிருந்தார்.

இந்நிலையில், மேற்கு வங்காள முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த சுவேந்து அதிகாரியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.
மம்தா பானர்ஜி பேசுகையில், "அதிகாரம் என்பது தற்காலிகமானது தான். நாற்காலி வரலாம், போகலாம். ஆனால் ஜனநாயகம் என்றென்றும் தொடரும் என்பதை பாஜக புரிந்து கொள்ளவில்லை. அரசியலமைப்பில் சில திருத்தங்கள் செய்யப்படலாம். ஆனால் இந்த அரசியலமைப்பை புல்டோசர் மூலம் தகர்க்க முடியாது.
பாஜக தற்போது ஆட்சியில் இருக்கிறது. அதனால் தான் அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்கிறார்கள். வரும் 2024ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக வெற்றி பெறாது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவால் 200 இடங்களுக்கு மேல் வெற்றிபெற முடியாது. 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் 200 இடங்களைப் பிடிப்போம் என்றார்கள். 2024ல் அந்த 200 இடங்களைக் கூட பாஜகவால் பிடிக்க முடியாது.

எனது கட்சியின் பெயர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் என்றே இருக்கும். திரிணாமுல் காங்கிரஸ் தேசிய கட்சி அந்தஸ்தை இழந்தது தொடர்பாக நான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்பு கொண்டு பேசியதை நிரூபித்தால் நான் எனது முதலமைச்சர் பதவியையே ராஜினாமா செய்வேன்" எனத் தெரிவித்துள்ளார் மம்தா பானர்ஜி.












Click it and Unblock the Notifications