அரசு வேலைக்கு போகக்கூடாது.. "அதற்காக இப்படியும் பண்ணுவாங்களா?” - கொடூர கணவன் செய்த காரியம்!
கொல்கத்தா : மனைவி அரசு வேலைக்குச் செல்லக்கூடாது என்பதற்காக அவரது கையை மணிக்கட்டுக்கு கீழே வெட்டிய கணவனின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை கிடைத்த நிலையில், அவரை வேலைக்குச் செல்லக்கூடாது எனக் கூறி வந்துள்ளார் அவரது கணவர்.
இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்து வந்த நிலையில், மனைவி கையை வெட்டிவிட்டு, அந்த பாகத்தை மறைத்து வைத்துவிட்டு அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார் கணவர்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்க மாநிலம், கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த கேதுகிராம் பகுதியைச் சேர்ந்தவர் ஷெர் முகமது. இவரது மனைவி ரேணு காதுன். இவர் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ரேணுவுக்கு அரசு மருத்துவமனையில் செவிலியர் பணியில் சேருவதற்கு அப்பாயின்மெண்ட் ஆர்டர் கிடைத்துள்ளது. இதுகுறித்து தனது கணவரிடம் கூறியுள்ளார். அரசு வேலை கிடைக்கும் செய்தி கணவருக்கு மகிழ்ச்சியைத் தரும் என எதிர்பார்த்தால், நடந்தது என்னவோ அதற்கு எதிரான சம்பவம்.

அரசு வேலை
ரேணுவின் கணவர், அவரை அரசு வேலைக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.ஆனால் ரேணு காதுன், கணவன் பேச்சைக் கேட்க மறுத்து வேலைக்குச் செல்வேன் என உறுதியாக இருந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதையடுத்து சம்பவத்தன்று இருவருக்கும் இடையே வேலையில் சேருவது தொடர்பாக மீண்டும் சண்டை வந்துள்ளது.

கையை வெட்டிய கணவன்
இதில் ஆத்திரமடைந்த ஷெர் முகமது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கையை விட்டியுள்ளார். பிறகு அவரே மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். ஆனால், துண்டாகிய கையை இணைத்து ஆபரேஷன் செய்துவிடுவார்களோ எனக் கருதி துண்டான கையை ஒளித்து வைத்துள்ளார். மருத்துவர்கள் எப்படி காயம் ஏற்பட்டது எனக் கேட்டதற்கு முன்னுக்குப் பின் முரணாகப் பேசியுள்ளார். தொடர்ந்து மருத்துவகள் கேள்வி கேட்டுக்கொண்டே இருந்ததால் அங்கிருந்து தலைமறைவாகியுள்ளார். உடனே மருத்துவர்கள் இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

விசாரணையில் அதிர்ச்சி
மருத்துவமனைக்கு வந்து விசாரித்த போலிஸாரிடம் நடந்தவற்றை விலாவரியாகச் சொல்லியுள்ளார் ரேணு காதுன். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாக உள்ள ஷேர் முகமதுவை தேடி வருகின்றனர். வேலை இல்லாத ஷேர் முகமது, மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் தன்னை விட்டு பிரிந்து சென்றுவிடுவார் என்ற சந்தேகத்தில் அரசு வேலையில் சேர்வரை தடுக்கவே அவரது கையை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications