ஹைதராபாத் கோர்ட்டில் வைத்து மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்த கணவர்
ஹைதராபாத்: ஹைதராபாத் நீதிமன்றத்தில் வைத்து ஒருவர் தனது மனைவியின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்தவர் சௌஜன்யா. அவரது கணவர் நாகேந்தர் பாபு. நாகேந்தர் பாபுவின் வருமானத்தை வைத்து தான் குடும்பம் நடந்து வருகிறது. இந்நிலையில் பாபுவுக்கும், வேறு ஒரு பெண்ணிற்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.

கள்ளத்தொடர்பு ஏற்பட்டதை அடுத்து அவர் வீட்டு செலவுக்கு மனைவிக்கு பணம் அளிப்பதை நிறுத்திவிட்டார். இதையடுத்து சௌஜன்யா இது குறித்து ஹைதராபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
பணம் கேட்டு வழக்கு தொடர்ந்த மனைவி மீது பாபு கோபம் அடைந்தார். இந்நிலையில் திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்காக இருவரும் நீதிமன்றத்திற்கு வந்தனர். அப்போது பாபு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சௌஜன்யாவின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
இந்த சம்பவத்தை பார்த்த மக்கள், வழக்கறிஞர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சௌஜன்யாவின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications