4 நாட்களாக இன்ச் கூட நகராத வாகனங்கள்.. தேசிய நெடுஞ்சாலையில் 65 கிமீ தூரம் டிராபிக்.. என்ன காரணம்?
பாட்னா: நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் ஒன்றான தேசிய நெடுஞ்சாலை 13ல் மிக மோசமான டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4 நாட்களாக இந்த டிராபிக் பாதிப்பு தொடரும் நிலையில், 65 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்த நிற்கின்றன. இந்தளவுக்கு டிராபிக் மோசமாக என்ன காரணம்.. இது எப்போது சீராகும் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
நமது நாட்டில் சில சாலைகளில் திடீரென டிராபிக் நெரிசல் ஏற்பட்டு, பல மணி நேரம் வரை சாலையில் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. அப்படியொரு மோசமான டிராபிக் நெரிசல் தான் பீகாரில் ஏற்பட்டுள்ளது. டெல்லி- கொல்கத்தா நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 19ல் பீகாரில் தான் இந்த டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மிக மோசமான டிராபிக்
இதனால் அங்குச் சுமார் நான்கு நாட்களாக வாகனங்கள் ஸ்தம்பித்துள்ளன. சுமார் 60 கிமீ வரை நீண்டுள்ள இந்த டிராபிக் நெரிசலால் பல நூறு வாகனங்கள் பம்பர்-டு-பம்பர் டிராபிக்கில் சிக்கி நிற்கின்றன. இப்போதைய சூழலில் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு கிடைப்பது போலத் தெரியவில்லை.
என்ன காரணம்
கடந்த வெள்ளிக்கிழமை ரோத்தாஸ் மாவட்டத்தில் பெய்த கனமழையே இதற்குப் பிரதானக் காரணமாகும்.. அந்த நெடுஞ்சாலையில் கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில், மழை நிலைமையை மோசமாக்கியது. இந்தக் கனமழையால் மாற்றுப்பாதைகள் மற்றும் சர்வீஸ் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் சாலைகள் எங்கும் பள்ளங்கள் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் வாகனங்கள் நகர முடியாமல் திணறுகின்றன. ஒவ்வொரு மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
சில கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கக் கூட பல மணிநேரம் ஆகிறதாம். இந்தப் போக்குவரத்து நெரிசல் ரோத்தாஸ் நகரத்திலிருந்து சுமார் 65 கி.மீ தொலைவில் உள்ள அவுரங்காபாத் வரையிலும் நீண்டுள்ளது.
கண்டுகொள்ளாத நிர்வாகம்
நிலைமை இந்தளவுக்கு மோசமாக இருந்தாலும் கூட இந்த மாபெரும் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க உள்ளூர் நிர்வாகம் எந்தவொரு முயற்சியையும் எடுக்கவில்லை என்றே தெரிகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் இதில் தலையிடவில்லை. சாலை போடும் சம்பந்தப்பட்ட நிறுவனமும் இதைக் கண்டுகொள்ளவில்லை. இப்படி எந்தவொரு தரப்பும் நடவடிக்கை இல்லாமல் வேடிக்கை பார்ப்பதால் நிலைமை மோசமாகிறது.
ஒவ்வொரு மணி நேரமும் டிராபிக் பாதிப்பு மோசமாகிக் கொண்டே இருப்பதால் வாகனங்கள் நத்தை வேகத்திலேயே ஊர்ந்து செல்கிறது. வெறும் ஐந்து கிலோமீட்டர் தூரத்தைக் கடக்கவே கூட 20 மணி நேரத்திற்கு மேல் ஆவதாக வாகன ஓட்டிகள் புலம்புகிறார்கள்.
வாகன ஓட்டிகள் புகார்
இது தொடர்பாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ள லாரி ஓட்டுநர் பிரவீன் சிங் கூறுகையில், "கடந்த 30 மணி நேரத்தில் வெறும் 7 கிலோமீட்டர் மட்டுமே பயணித்துள்ளோம். சுங்கக்கட்டணம், சாலை வரி மற்றும் பிற கட்டணங்கள் முறையாகச் செலுத்துகிறோம். ஆனாலும், இதுபோன்ற டிராபிக் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகளோ அல்லது உள்ளூர் நிர்வாகமோ இதைச் சரி செய்ய எந்தவொரு முயற்சியும் எடுக்கவில்லை" என்றார்.
மற்றொரு லாரி ஓட்டுநர் சஞ்சய் சிங் இது குறித்து, "இரண்டு நாட்களாகப் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறோம். ஒரு சில கிலோமீட்டரைக் கடக்கவே பல மணிநேரம் ஆகிறது.. உணவு தண்ணீர் கிடைப்பதிலும் சிரமம் இருக்கிறது" என்று கூறினார்.
பாதிப்பு
டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ள டெல்லி- கொல்கத்தா ரூட் மிகவும் முக்கியமானது. இதில் பல வாகனங்கள் விரைவில் கெட்டுப்போகக்கூடிய காய்கறி, பழங்கள் உள்ளிட்ட சரக்குகளை ஏற்றி வருகிறது. இதனால் அவை கெட்டுப்போனால் வர்த்தகர்களுக்குக் கடும் கஷ்டம் ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இது மட்டுமின்றி ஆம்புலன்ஸ்கள், அவசர சேவை வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களும் கூட இந்த நெரிசலில் சிக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications