மேகாலயா தேர்தல்- சாதிக்க போவது எந்த 'சங்மா'? மேற்கு வங்கம் போல வெற்றி வாகை சூடுவாரா மமதா பானர்ஜி?
வாக்குப் பதிவு நடைபெற்று வரும் மேகாலயா மாநிலத்தில் வெல்லப் போவது எந்த சங்மா? என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பு.
ஷில்லாங்: மேகாலயா மாநில சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேகாலயா மாநில சட்டசபை தேர்தலில் வெல்லப் போவது பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ள கான்ராட் சங்மாவா? காங்கிரஸை விட்டு திரிணாமுல் காங்கிரஸுக்கு 12 எம்.எல்.ஏக்களை கூண்டோடு அழைத்துக் கொண்டு போய முகுல் சங்மா? என்கிற எதிர்பார்ப்பு தொடருகிறது.

60 தொகுதிகளைக் கொண்டது மேகாலயா சட்டசபை. இம்மாநிலத்தில் 59 தொகுதிகளில் காலை முதலே விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 45 வயதுதான் ஆகும் முதல்வர் கான்ராட் சங்மாவின் தேசிய மக்கள் கட்சி- என்.பி.பி., பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்டுள்ளது. முன்னாள் லோக்சபா சபாநாயகர் பி.ஏ.சங்மாவின் மகன் கான்ராட் சங்மா. 2008-ம் ஆண்டே மாநிலத்தின் இளம் வயது நிதி அமைச்சராக பதவி வகித்தவர். என்.பி.பி. கட்சியை ஒரு தேசிய கட்சியாக உருவெடுக்க வைக்க வேண்டும் என்ற தந்தையின் கனவுக்காக போராடுகிறார்.
2018-ம் ஆண்டு மேகாலயா சட்டசபை தேர்தலில் கான்ராட் சங்மாவின் என்.பி.பி. கட்சி மொத்தம் உள்ள 60 தொகுதிகளில் 18-ல் தான் வென்றது. காங்கிரஸ் கட்சியோ 21 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக நின்றது. ஆனால் கான்ராட் சங்மா, சாதுரியமாக காய்களை நகர்த்தி பாஜக மற்றும் இதர கட்சிகளை ஒருங்கிணைத்து ஆட்சியைக் கைப்பற்றினார். ஆனால் தற்போது இந்த கூட்டணி முறிந்துவிட்டது.என்பிபி 57 தொகுதிகளிலும் பாஜக 60 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. இருப்பினும் தேர்தலுக்குப் பின்னர் இந்த கூட்டணி மீண்டும் உருவெடுக்கலாம் என்பதையும் மறுக்க முடியாது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
மேகாலயா தேர்தல் களத்தில் கான்ராட் சங்மாவுக்கு சவால் விடுபவர் முகுல் சங்மா. மேகாலயா மாநில காங்கிரஸின் முகமாக இருந்தவர். காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்களை அழைத்துக் கொண்டு அப்படியே மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேகாலயா மாநிலத்தின் பிரதான எதிர்க்கட்சியானது. தற்போதைய தேர்தலில் என்.பி.பி- திரிணாமுல் காங்கிரஸ் இடையேதான் கடும் போட்டி. மேகாலயாவில் எப்படியும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டும் என்பது முகுல் சங்மாவின் வியூகம். அப்படி நிகழ்ந்துவிட்டால் மே.வங்கத்தைத் தொடர்ந்து திரிணாமுல் ஆட்சியை கைப்பற்றும் 2-வது மாநிலம் மேகாலயாவாக இருக்கும். இதனால் மேகாலயாவில் வெல்லப் போவது எந்த சங்மா? என்கிற எதிர்பார்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications