குஜராத் மாடல் டூ மேக் இன் இந்தியா டூ டிஜிட்டல் இந்தியா.. வீறு நடை போடும் மோடி!
டெல்லி: பிரதமர் மோடி இந்திய பிரதமராகவும், குஜராத் முதல்வராகவும் பல முக்கியமான நலத்திட்டங்களை இந்தியாவிற்கு கொண்டு வந்துள்ளார். இவரது ஆட்சி மூலம் பல கோடி மக்கள் நலத்திட்டங்களை பெற்று இருக்கிறார்கள்.
கடந்த 2014 மே 26ம் தேதி 45 அமைச்சர்களுடன் பிரதமர் மோடி இந்தியாவின் 15வது பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். தனிப்பெரும்பான்மையுடன் அவர் ஆட்சி அமைத்தார்.
பிரதமர் மோடி தனது நான்கு ஆண்டு ஆட்சியை முடித்துவிட்டு ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைத்து வெற்றிநடை போட்டு வருகிறார். ஆட்சிக்கு வரும் முன் எந்த அளவிற்கு இவர் மீது புகழ் வெளிச்சம் இருந்ததோ அதே அளவிற்கு தற்போது இவர் புகழோடு வெற்றிநடை போடுகிறார். இந்த ''லைம்-லைட்டை'' தக்க வைத்துக் கொள்ள மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பல நலத்திட்டங்களை செய்ய வேண்டி இருந்தது.

இந்த நலத்திட்டங்கள் மக்கள் மத்தியில் அவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. அடுத்த நாடாளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் தொடங்க உள்ள நிலையில் இவர் ஆட்சியின் நலத்திட்டங்கள் ஒரு சின்ன ரீ-கேப்.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி மூன்று முறை தொடர்ச்சியாக இருந்தார். குஜராத்தின் பொன்னான காலம் என்று இந்த ஆட்சி காலம் இப்போதும் வர்ணிக்கப்படுகிறது. இந்த ஆட்சியில் இவர் செய்த நலத்திட்டங்கள்தான், இவர் பிரதமராக போட்டியிடவே முக்கிய காரணமாக அமைந்தது.
குஜராத் மாடல் என்று அழைக்கப்படும் அவரது ஆட்சி காலத்தில் சில வியத்தகு திட்டங்களை நிறைவேற்றினார்.
1- இவரது ஆட்சி காலத்தில்தான் குஜராத்தில் மிகவும் அதிக அளவில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பு இருந்ததை விட, இவரது ஆட்சியில் உலகின், இந்தியாவின் முக்கிய நிறுவனங்கள் குஜராத்தில் தங்களது நிறுவன கிளைகளை தொடங்கியது.
2- அதேபோல், இந்த நிறுவனங்கள் நேரடியாக குஜராத் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க உறுதுணையாக இருந்தது. இவரது ஆட்சி காலத்தில் வேலையின்மை 1 சதவிகிதமாக 2012ல் குறைந்தது. அப்போது இந்தியாவில் அதுதான் மிக குறைவு.
3- இவரது ஆட்சி காலத்தில் குஜராத்தில் 2009-2010 ல்வறுமை கோட்டிற்கு கீழே இருந்தவர்களின் சதவிகிதம் பெரிய அளவில் குறைந்தது. 39.1% தொடங்கி 26.7%க்கு வறுமையில் இருந்தவர்களின் சதவிகிதம் குறைந்தது.
4- இது மட்டுமில்லாமல், குஜராத்தில் செய்யப்பட்ட நீர் மேலாண்மை இப்போதும் இந்தியா முழுக்க எடுத்துக்காட்டாக பின்பற்றப்பட வேண்டிய ஒன்றாக உள்ளது. ''சுஜலாம் சுபலாம்'' என்று நீர் மேலாண்மைக்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டம் மிக சிறப்பான பலனை கொடுத்தது.
5- அதேபோல் குஜராத் விவசாயிகளுக்காக ''கிரிஷி மஹோட்ஸாவ்'' என்ற திட்டம் மூலம் குஜராத்தின் அப்போதைய முதல்வர் மோடி, அதிக லோன்களையும், வளர்ச்சி திட்டங்களையும் அளித்தார்.
இத்தனை சாதனைக்கு பின்புதான், இந்தியாவின் பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டார். அதேபோல் குஜராத் மாடல் அவருக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. தற்போது பிரதமர் மோடி தற்போது நான்கு வருட ஆட்சியை முடித்து ஐந்தாவது வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்.
இதிலும் பல குறிப்பிட தகுந்த சாதனைகளை பிரதமர் மோடி செய்துள்ளார்.
1- ''மேக்இன்இந்தியா'' மூலம் பிரதமர் மோடி இந்தியாவில் சுயதொழில் செய்பவர்களையும், புதிய நிறுவனங்களையும் வளர்த்தெடுக்க உதவினார்.
2- ''டிஜிட்டல் இந்தியா'' திட்டம் மூலம் பேஸ்புக், டிவிட்டர், மைக்ரோசாப்ட் என்று எல்லா உலக நிறுவனங்களையும் இந்தியாவை நோக்கி திரும்பி பார்க்க வைத்தார். பெங்களூருக்கு மட்டுமே என்று இருந்த ''சிலிக்கான்'' புரட்சியை இந்தியா முழுக்க கொண்டு சென்றார்.
3- ''ஸ்வட்ச் பாரத் திட்டம்'' மூலம் இந்தியாவில் பெரிய அளவில் சுத்தம் குறித்த விழிப்புணர்வை கொண்டு சென்றார்.
4- 100க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணங்கள் மூலம் கடந்த காலங்களில் இல்லாத அளவிற்கு, பிரதமர் மோடி வெளிநாடுகளுடன் நல்ல உறவை வலுப்படுத்தி வைத்துள்ளார். முக்கியமாக ஆசிய நாடுகளுடனும், அமெரிக்காவுடனும் முக்கிய நட்பை ஏற்படுத்தினார்.
5- இந்தியாவில் பல மாநிலங்களில் 6 வழி சாலைகளை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அமைத்தது. இன்னும் பல மாநிலங்களில் முக்கிய நகரங்களை 8 வழி சாலை மூலம் இணைக்கும் வகையில் திட்டங்கள் அரங்கேற்றப்பட்டு வருகிறது.
6- கடைசியாக பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன் அறிவித்த மருத்துவ காப்பீட்டு திட்டம் உலகம் முழுக்க வரவேற்பை பெற்றுள்ளது. 130 கோடி பேர் இருக்கும் நாட்டில் மருத்துவ காப்பீட்டு திட்டம் கொண்டு வருவது மிகப்பெரிய விஷயம் என்று உலக நாடுகள் புகழ்ந்தது.
இன்னும் ஜிஸ்டி தொடங்கி பல முக்கியமான திட்டங்களை பிரதமர் மோடி இந்த நான்கு வருடங்களில் இந்திய மக்களுக்கு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.