மோடியின் 'காங்கிரஸ் இல்லாத இந்தியா' பிரசாரத்தை ஏற்காத மக்கள்! பல மாநில தேர்தல் முடிவுகளே உதாரணம்
Recommended Video

டெல்லி: இந்திய மக்களின் மனநிலையை பார்க்கும்போது, பிரதமர் மோடியின், 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' கனவு பலிக்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த அறைகூவலுக்கு, அவரின் சொந்த மாநில மக்களே செவி சாய்க்கவில்லை என்பது இன்றைய தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம்.
2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்தித்தபோது, 'காங்கிரஸ் முக்த் பாரத்' என்ற கோஷம் தீவிரமாக மோடியால் முன் வைக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகள் நிரம்பி வழிந்த நிலையில் இந்த பிரச்சாரம் மக்களுக்கு பிடிக்கும் என்பது மோடியின் எண்ணம்.
ஏறத்தாழ அந்த தேர்தலில் அப்படித்தான் முடிவும் வந்தது.

காங்கிரஸ் இல்லாத இந்தியா
பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத அளவுக்குத்தான் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது. எனவே இந்த கோஷத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டது பாஜக மற்றும் மோடி. அடுத்தடுத்த பல தேர்தல்களில் பாஜக இந்த கோஷத்தை முன்வைத்து வெற்றி கண்டது.

வலுவான எதிர்க்கட்சி அவசியம்
ஆனால், ஒரு எல்லைக்கு பிறகு இந்த கோஷம் எடுபடவில்லை. ஏன் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாஜக ஆட்சிக்கு வந்து இத்தனை வருட காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக காங்கிரசின் பெரிய தலைகள் யாருமே சிறைக்கு செல்லவில்லை. இதுவும் அந்த கோஷம் எடுபடாமல் போக காரணம்.

ஏகாதிபத்தியம்
மேலும், வலுவான எதிர்க்கட்சி இல்லாவிட்டால், அரசு ஏகாதிபத்திய தோரணையில் முடிவுகளை எடுக்கும் என்ற நினைப்புக்கு மக்கள் வந்துவிட்டார்கள். பண மதிப்பிழப்பு போன்ற சாமானிய மக்களை பாதிக்கும் முடிவுகளை அரசு அதிரடியாக எடுத்தது இதற்கு காரணமாக இருக்கலாம். வலுவான எதிர்க்கட்சி இல்லாததால் அரசு இஷ்டப்படியெல்லாம் முடிவுகளை எடுக்க முடிகிறது.

5 மாநில சட்டசபை தேர்தல்கள்
பிரதமரின், காங்கிரஸ் இல்லாத இந்தியா, கோஷம் எடுபடவில்லை என்பதற்கு கடந்த மார்ச் மாதம் வெளியான 5 மாநில சட்டசபை தேர்தல்கள் நல்ல உதாரணம். அந்த தேர்தலின்போது, உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட்டில் பாஜக அபார வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. ஆனால், பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. பாஜக கூட்டணி தோற்றது.

காங்கிரசுக்கே அதிக இடம்
மணிப்பூர், கோவா மாநிலங்களில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் இழுபறி நீடித்தது. ஆனால் அந்த மாநிலங்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கிடைத்தன. பிறகு கோல்மால்கள் அரங்கேறியபோதிலும், இழுபறி நீடித்த அந்த இரு மாநிலங்களிலும் பாஜகவைவிட காங்கிரஸ் அதிக இடங்களில் வெற்றி பெற்றிருந்தது கவனிக்கத்தக்கது.

குஜராத்தே ஏற்கவில்லை
இப்போது குஜராத்திலும், பாஜகவுக்கு மிக கடும் போட்டியை கொடுத்துள்ளது காங்கிரஸ். கிட்டத்தட்ட இழுபறி நிலைதான் பல முறை டிரெண்டிங்கை மாற்றியது. ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்கனவே ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி அதை பறி கொடுத்துள்ளது. குஜராத்தை பொறுத்தளவில் கடந்த தேர்தலைவிட அதிக தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம், மோடியின் அரைகூவலை அவரது மாநிலமும் ஏற்கவில்லை. பஞ்சாப், மணிப்பூர் முதல் கோவா வரை பிற மாநிலங்களும் ஏற்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications