மோடிதான் பிரதமர் வேட்பாளர், அதில் மாற்றமே இல்லை... ராஜ்நாத் சிங்
பெங்களூர்: நரேந்திர மோடி போன்ற தலைவர்தான் நாட்டுக்கு அடுத்து பிரதமராக வர வேண்டும். எனவே நரேந்திர மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர். அவரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறியுள்ளார் பாஜக தலைவர் ராஜ்நாத் சி்ங்.
பெங்களூரில் இன்று மோடி கலந்து கொண்ட கூட்டத்தில் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறினார். பிரதமர் வேட்பாளரை பாஜக மாற்றலாம் என்று கிளம்பிய பேச்சை சுட்டிக் காட்டி மறுத்து இப்படிக் கூறினார் ராஜ்நாத் சிங்.

அவர் கூறுகையில், குஜராத் முதல்வர் மோடியைப் போன்ற ஒருவர்தான் நாட்டின் அடுத்த பிரதமராக வர வேண்டும். எனவே மோடிதான் பாஜகவின் பிரதமர் வேட்பாளர். அதில் எந்த மாற்றமும் இல்லை.
கர்நாடக மக்கள் மோடி தலைமையிலான பாஜகவுக்கு வாக்களித்து ஆட்சிப் பீடத்தில் ஏற்ற வேண்டும்.
பாஜக பொறுப்பான எதிர்க்கட்சி. அதை ஏதோ திருடன் போல பாவித்துப் பேசுகிறார் ராகுல் காந்தி. நாங்கள் திருடர்கள் அல்ல, நாட்டின் காவலர்கள். இந்த நாட்டின் பொக்கிஷத்தை, கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் காவலனாக மட்டுமே பாஜக என்றும் திகழும் என்றார் சி்ங்.
முன்னதாக பெங்களூர் கூட்டத்திற்காக தொண்டர்களிடமிருந்து நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்பட்ட ரூ. 35 லட்சத்துக்கான காசோலையை மோடியிடம் கூட்டத்தின் போது வழங்கினர்.
தலைக்கு ரூ. 10 கட்டணம் வசூலிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 3 லட்சம் பேரிடம் நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிதியானது, குஜராத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை திட்டத்திற்கு நன்கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications