சாத்வியின் சர்ச்சை பேச்சு... காஷ்மீர் மக்களிடம் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்: உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி பேச்சுக்காக பிரதமர் நரேந்திர மோடி காஷ்மீர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என அம்மாநில முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக பொதுக் கூட்டத்தில் பேசிய மத்திய இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, 'இஸ்லாமியர் மற்றும் கிறிஸ்துவர் உள்பட அனைவரும் ராமரின் பிள்ளைகள். இந்த சித்தாந்தத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இந்தியாவில் இடம் இல்லை' எனப் பேசியது சர்ச்சையை உண்டாக்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு தினங்களாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். சாத்வி நிரஞ்சன் மன்னிப்பு கேட்டபோதும், எதிர்க்கட்சிகள் சமாதானம் ஆகவில்லை. சாத்வி நிரஞ்சன் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பாக நேற்று செய்தியாளர்கள் மத்தியில் பேசினார் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா. அப்போது அவர் கூறியதாவது :-
'காஷ்மீர் மாநிலம் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலம் ஆகும். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பாஜக. கூட்டத்தில் பேசிய மோடியின் அமைச்சரவையில் உள்ள ஒரு பெண் அமைச்சர் எங்களைப் போன்றவர்களைப் பற்றி தரக்குறைவான மொழியால் விமர்சித்துள்ளார். இதைப் போன்றதொரு வெறுப்பூட்டும் கருத்தை அந்த கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள நிலையில், அவர்களுக்கு இங்குள்ள மக்கள் எப்படி வாக்களிப்பார்கள்?
அந்த அமைச்சர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என காஷ்மீர் மக்களுக்கு மோடி விளக்கம் அளிப்பதுடன் அவர்களிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதன் தொடர்ச்சியாக, ஸ்ரீநகரில் வரும் 8-ம் தேதி நடைபெறும் மோடியின் பிரச்சார கூட்டத்துக்கு சுமார் ஒரு லட்சம் மக்கள் திரள்வார்கள் என பாஜகவினர் கூறி வருகிறார்களே..? என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், 'முன்னர் பிரிவினைவாதியாக இருந்து தற்போது அரசியல்வாதியாக மாறியிருக்கும் சாஜத் லோனே ஒருவர் போதும். அவர் மட்டுமே மோடியின் கூட்டத்துக்கு சுமார் 30 ஆயிரம் பேரை அழைத்து வந்து விடுவார்.
பாஜக.விடம் பணத்துக்கு பஞ்சம் இல்லை. வாகனங்கள் ஏற்பாடு செய்து தந்து, சாப்பாடும் போடும் அளவுக்கு வசதி படைத்த அவர்களுக்கு மோடியின் கூட்டத்துக்கு ஒரு லட்சம் மக்களை திரட்டுவது என்பது பெரிய காரியமே அல்ல' என்று அவர் பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications