காவிரி பிரச்சனையில் தலையிட முடியாது- தேவகவுடாவிடம் மோடி திட்டவட்டம்!
டெல்லி: காவிரி நதிநீர் பிரச்சனையில் தாம் தலையிட முடியாது என்று பிரதமர் மோடி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
காவிரியில் தமிழகத்துக்கு நீரை திறந்துவிட உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இதனை ஏற்று தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
ஆனால் காவிரி நீரை திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகா போர்க்கோலம் பூண்டிருக்கிறது. தமிழகத்துக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன.

சித்தராமையா கடிதம்
இந்த நிலையில் பிரதமர் மோடி தலையிட்டு, காவிரி பாயும் மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் வரும் 12-ந் தேதியன்று காவிரி கண்காணிப்புக் குழுக் கூட்டம் நடைபெற உள்ளது.

கண்காணிப்புக் குழு கூட்டம்
இக்கூட்டத்தில் காவிரி பாயும் மாநிலங்களின் தலைமைச் செயலர்கள் பங்கேற்க உள்ளனர். இதனிடையே பிரதமர் மோடியை முன்னாள் பிரதமர் தேவகவுடா நேற்று டெல்லியில் சந்தித்தார்.

கவுடா சந்திப்பு
அப்போது காவிரி பிரச்சனையில் தலையிடுமாறு மோடியை தேவகவுடா கேட்டுக் கொண்டார். ஆனால் தேவகவுடாவின் கோரிக்கையை பிரதமர் மோடி நிராகரித்தார்.

தலையிட மோடி மறுப்பு
உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தில் தலையிட முடியாது என்று தேவகவுடாவிடம் மோடி திட்டவட்டமாக கூறியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications
