குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் மோடி! சட்டசபையில் எம்.எல்.ஏக்கள் புகழாரம்!!
அகமதாபாத்: நாட்டின் பிரதமராக பொறுப்பேற்க உள்ள நரேந்திர மோடி குஜராத் முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்தார். முன்னதாக குஜராத் சட்டசபையில் பிரியாவிடை நிகழ்வில் உரையாற்றிய மோடி, குஜராத் மாடல் என்ன என்பதை அறிய நாடு காத்திருக்கிறது என்று கூறினார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி தேர்வு செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மோடியை பிரதமராக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நியமித்தார்.
நரேந்திர மோடி வரும் 26-ந் தேதி நாட்டின் 14வது பிரதமராக பொறுப்பேற்க இருக்கிறார். இதற்கு வசதியாக குஜராத் முதல்வர் பதவியை இன்று அவர் ராஜினாமா செய்தார்.

முன்னதாக குஜராத் சட்டசபையில் நரேந்திர மோடிக்கான பிரியாவிடை விழா நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் எம்.எல்.ஏ உட்பட பலரும் நரேந்திர மோடிக்கு புகழாரம் சூட்டினர்.
இந்த பிரியாவிடை நிகழ்ச்சியில் பேசிய மோடியின் வலதுகரமான அமீத்ஷா, ஒட்டுமொத்த தேசமே குஜராத் மண்ணின் மைந்தர் மோடியை ஆதரிக்கிறது. அரசியலுக்கு அப்பால் குஜராத்தின் வளர்ச்சிக்கான ஆதரவையே தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தின. சமரச சமாஜ்-க்காக தலித் மக்களை மையநீரோட்டத்தில் இணைத்தவர் மோடி. நாட்டின் பிறபகுதி இளைஞர்கள் வேலைவாய்ப்பு தேடி குஜராத் வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
அதன் பின்னர் அமைச்சர் நிதின் பட்டேல் புகழாரம் சூட்டினார். அவரைத் தொடர்ந்து குஜராத் புதிய முதல்வராக பொறுப்பேற்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் ஆனந்திபென் மோடியைப் பாராட்டி பேசினார்.
குஜராத் மாடலுக்காக நாடு காத்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் சங்கர்சிங் வகேலா பேசினார். பின்னர் ஏற்புரையாற்றிய மோடி தமது உரையில் கூறியதாவது:
குஜராத் சட்டசபையில் நான் நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். 4 முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டு சிறப்பிக்கப்பட்டேன். குஜராத்தில் கடந்த 12-13 ஆண்டுகால வளர்ச்சிக்கு அனைவரும் பங்களிப்பு செய்துள்ளனர். நாட்டின் பிரதமரான என்னை தமது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றதாக சங்கர்சிங் வகேலா பெருமிதம் தெரிவித்தார்..
அவருடைய மோட்டார் சைக்கிளில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்றிருக்கிறேன். குஜராத் மாடல் பற்றி நாடு அறிந்து கொள்ள காத்திருக்கிறது.. நான் மாநிலத்தின் முதல்வராக பொறுப்பேற்றபோது நிதிமுறைகேடு, நிலநடுக்கத்தால் குஜராத் பாதிக்கப்பட்டிருந்தது. 2002-ல் குஜராத் கலவரத்தின் போது நாடு பல சவால்களை எதிர்கொண்டிருந்தது.
என்னைப் பொறுத்தவரையில் நிறுவனங்களை சுதந்திரமாக செயல்பட அனுமதித்தேன். அதனால் சுயமாக விரைவாக முடிவெடுக்க முடிந்தது. இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.
ராஜினாமா
இதனைத் தொடர்ந்து மாலை 3.30மணியளவில் காந்திநகரில் ஆளுநர் கமலா பெனிவாலை நேரில் சந்தித்த நரேந்திர மோடி தமது ராஜினாமா கடிதத்தை நேரில் கொடுத்தார். 2001ஆம் ஆண்டு முதல் 12 ஆண்டுகாலமாக நரேந்திர மோடி குஜராத் முதல்வராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications