மரபணு நோயால் வாடும் பாக். சிறுமிக்கு நிதியுதவியை வாரி வழங்கிய மும்பை மக்கள்
மும்பை: அரிய வகை மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டுள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் சிகிச்சைக்கு மும்பை மக்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரைச் சேர்ந்த நசியா என்பவரின் மகள் சபா தாரிக் அகமது(15). அவர் அரிய வகை மரபணு கோளாறான வில்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். உடலில் செப்பின் அளவு அதிகரிப்பதால் ஏற்படும் வில்சன் நோயால் கல்லீரல், மூளை ஆகியவை சிதையும்.

நசியா தனது மகளை அழைத்துக் கொண்டு இந்தியா வந்து மும்பையில் உள்ள ஜஸ்லோக் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சிகிச்சைக்கு அவரிடம் போதிய பணம் இல்லாததால் அவரின் சகோதரி இது குறித்து சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்தார். அதை பார்த்த மும்பை மக்கள் சபாவின் சிகிச்சைக்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளனர்.
இது குறித்து நசியா கூறுகையில்,
நாங்கள் சபாவின் சிகிச்சைக்காக ரூ.3-4 லட்சம் சேமித்து வைத்தோம். ஆனால் அதை இந்திய ரூபாய்க்கு மாற்றுகையில் ரூ.80 ஆயிரம் தான் கிடைத்தது. இந்நிலையில் தான் எங்களுக்கு யார் என்றே தெரியாத மும்பை மக்கள் ரூ.1.5 லட்சம் அளித்துள்ளனர்.
பாகிஸ்தானில் இருந்து வந்துள்ளோம் என்று இந்தியாவில் கூறாதே என்று சிலர் என்னிடம் தெரிவித்தார்கள். ஆனால் நான் பொய் சொல்ல விரும்பவில்லை. எனக்கு இந்திய டாக்டர்கள் மீது நம்பிக்கை உள்ளது. இந்திய மக்கள் எங்கள் மீது வைத்துள்ள அன்பை பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.
சபாவுக்கு மும்பை மக்கள் தவிர்த்து அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை டாக்டர்களும் உதவி செய்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications