பாஜகவில் அவமதிக்கப்பட்ட முண்டே… காங்கிரஸ் சேர திட்டமிட்டதாக தகவல்
மும்பை: அண்மையில் சாலை விபத்தில் மரணமடைந்த மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே, இறப்பதற்கு கடைசி நாள் வரை கட்சியில் அவமதிக்கப்பட்டு வந்ததாகவும், இதனால் அவர் பா.ஜ.கவை விட்டு விலக எண்ணியதாகவும் அவரது நெருங்கிய உதவியாளர் பாண்டுரங் ஃபண்ட்கர் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்ட்ரா மாநில பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களிடையே செல்வாக்குடன் திகழ்ந்த முண்டேவின் மறைவு, அந்த சமுதாயத்தினருக்கு மட்டுமல்லாது, அம்மாநில பா.ஜனதாவுக்கும் பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.

இந்நிலையில் மறைந்த முண்டேவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மகாராஷ்ட்ரா சட்டமேலவையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாண்டுரங் ஃபண்ட்கர், முண்டே பா.ஜனதாவுக்குள் போராடிக்கொண்டிருந்ததாகவும், ஒருகட்டத்தில் கட்சியைவிட்டே விலகும் அளவுக்கு கூட வந்ததாகவும் கூறினார்.
கடந்த 1974 ஆம் ஆண்டிலிருந்து முண்டேவுக்கு நெருங்கிய உதவியாளராக செயல்பட்டுவந்தவர் பாண்டுரங் ஃபண்ட்கர். அவரது இந்த பேச்சு பா.ஜனதாவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மேலும் பேசுகையில், "முண்டே ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் கட்சிக்குள் அவர் போராட்டத்தை எதிர்கொள்ளவேண்டியதாக இருந்தது. ஒருகட்டத்தில் அவர் கட்சியைவிட்டே விலக எண்ணியபோது, அவருக்கு காங்கிரஸில் சேர அழைப்பு வந்தது. மத்தியில் அவருக்கு கேபினட் அமைச்சர் பதவி, மாநிலத்தில் அவர் கூறுகிற 2 பேருக்கு அமைச்சர் பதவி தருவதாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால் மறைந்த சிவசேனா தலைவர் பால்தாக்கரேதான் முண்டேவை சமாதானப்படுத்தி, அவரை பா.ஜனதாவிலிருந்து விலகாதவாறு பார்த்துக்கொண்டார். ஆனால் கட்சிக்குள் முண்டே எப்பொழுதெல்லாம் போராட்டத்தை எதிர்கொண்டாரோ அப்போதெல்லாம் அவர் என்னிடம், " இதற்காகத்தான் என்னை காங்கிரஸில் சேரவிடாமல் தடுத்தாயா?" என கோபப்படுவார்.
கட்சிக்குள் அவர் அவதிக்கப்பட்டாலும் அவர் தனது வாழ்க்கையை கட்சிக்காக அர்ப்பணித்தார். அவரது மரணம் மற்றும் சந்தர்ப்ப சூழ்நிலை அவரை நேசிக்கும் மக்களிடையே குழப்பத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக உள்ளது. எனவே முண்டே மரணம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.












Click it and Unblock the Notifications