
ஆதரவற்ற இந்து பெண்.. ஓடிவந்து உதவிய முஸ்லிம்கள்! பெஹ்லுகான் கும்பல் படுகொலை நடந்த ஊரில் ஒற்றுமை பூ
ஜெய்பூர்: ராஜஸ்தானில் தாய், தந்தை இன்றி வளர்ந்த ஆதரவற்ற ஏழை இந்து பெண்ணின் திருமணத்தை இஸ்லாமியர்கள் ஒன்று கூடி நடத்தி வைத்தது நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு உதாரணமாக திகழ்ந்துள்ளது.
"எவ்வளவு பிரச்னைகளுக்கு மத்தியிலும் ஒரு பூ பூக்கத்தானே செய்கிறது?!" என கவிஞர் பிரபஞ்சன் எழுதியது பல விசயங்களோடு பொருந்திப்போகும் வாழ்க்கை தத்துவமாக விளங்குகிறது.
அதுதான் தற்போது ராஜஸ்தானிலும் நடந்துள்ளது. நாட்டில் சாதி, மத மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், முஸ்லிம்கள் ஒன்று சேர்ந்து இந்து பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்தது பிரபஞ்சனின் கவிதையை மெய்பிக்கும் வகையில் உள்ளது.

பெஹ்லு கான் படுகொலை
ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டம் நினைவிருக்கிறதா? கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதே பகுதியில்தான் பெஹ்லுகான் என்பவர் பசுவை கடத்திச் சென்றதாகக் கூறி இந்துத்துவா அமைப்பினரால் கும்பல் படுகொலை செய்யப்பட்டார். நாட்டையே உழுக்கிய அந்த சம்பவத்தின் வடுக்கள் இன்னும் பலரது உள்ளத்திலிருந்து ஆறாமல் உள்ளது.

அருஷி திருமணம்
இந்த நிலையில்தான் அதே ஆல்வார் மாவட்டத்தில் ஆருஷி என்ற ஆதரவற்ற இந்து பெண்ணின் திருமணத்தை இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி நடத்தி வைத்து இருக்கிறார்கள். அங்குள்ள ராம்கர் பகுதியை சேர்ந்த ஆருஷி ஒரு வயதாக இருக்கும்போது அவரது பெற்றோர் உயிரிழந்தனர்.

தாய், தந்தை மரணம்
மிகவும் எளிய குடும்பத்தில் பிறந்த ஆருஷிக்கு தாய் தந்தை இல்லாத காரணத்தால் அவரது மாமா ஜெயபிரகாஷ் ஜாங்கிட் அவரை சிறு வயதிலிருந்தே வளர்த்து வந்தார். ஆருஷியும் எம்.ஏ. வரை படித்து முடித்தார். இந்த நிலையில் டெல்லு துப் பகுதியை சேர்ந்த தால்சந்த் என்பவருடன் ஆருஷிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

இஸ்லாமிய அமைப்பு
ஆருஷிக்கு திருமணம் நடைபெறும் தகவல் அங்குள்ள இஸ்லாமிய அமைப்பான அஞ்சுமான் கல்வி குழுவின் தலைவரும், பஞ்சாயத்து சமிதி தலைவருமான நஸ்ரு கானுக்கு கிடைத்தது. உடனே அவரும் அவரது அமைப்பினரும் திருமணம் செய்யும் ஆருஷிக்கு தேவையான உதவிகளை செய்ய முன் வந்தனர்

திருமண செலவு
நேராக ஆருஷியின் வீட்டிற்கு சென்ற இஸ்லாமியர்கள் திருமண நிகழ்வில் கலந்துகொண்டு முன்னின்று அனைத்து சடங்குகளையும் செய்து வைத்தனர். திருமண ஏற்பாட்டிற்கான அனைத்து வகையான செலவுகளையும் ஏற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள், ரூ.31,000 தொகை மற்றும் இதர அன்பளிப்புகளையும் வழங்கினர்.

பலருக்கு உதவி
திருமணத்தில் ஆருஷி இந்து மத சடங்குகளை செய்துகொண்டிருந்தபோது அஞ்சுமான் அமைப்பின் தலைவர் நஸ்ரு கான் அவர்களை வாழ்த்தினார். இதுகுறித்து பேசிய அவர், பெற்றோர் இல்லாத பல பெண் குழந்தைகளுக்கு தாங்கள் இதுபோல் உதவி வருவதாக கூறினார்.

மத பதற்றம்
தொடர்ந்து பேசிய அவர், "ஆருஷி அவரது மாமாவால் வளர்க்கப்பட்டவர். அவருக்கு தேவையான உதவிகளை இந்து முறைப்படி செய்துள்ளோம். தேர்தல் காரணமாக இந்த ராம்கர் பகுதியில் இந்து - முஸ்லிம்கள் இடையே வெறுப்பை ஏற்படுத்தி மத பதற்றங்களை தூண்டும் வேலைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்து முஸ்லிம் ஒற்றுமை
எங்களது கங்கா ஜாம்னி கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இதை செய்து வருகிறோம். இந்து முஸ்லிம்கள் இடையே உள்ள பிரச்சனைகள் தீர்ந்து சகோதரத்துவம் மேலோங்க வேண்டும் என நாங்கள் பிரார்த்திக்கிறோம். இந்த ஏழை பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றதை நினைத்து மகிழ்கிறோம். மதத்தின் காரணமாக நாங்கள் இதை செய்யவில்லை. மனிதாபிமானத்தின் அடிப்படையில் செய்த உதவி." என்றார்.

ஆருஷி மாமா நெகிழ்ச்சி
இதுகுறித்து ஆருஷியின் மாமா ஜெயபிரகாஷ் கூறுகையில், "மக்களிடம் கடன் வாங்கி இந்த திருமணத்துக்கு ஏற்பாடு செய்தேன். ஆனால், இஸ்லாமிய மக்கள் தாங்களாக முன்வந்து உதவி செய்து எனது பதற்றத்தை நீக்கிவிட்டார்கள். அவர்களுக்கு நன்றி சொல்வது மட்டும் போதாது." என்றார்.

5 இந்து பெண்கள்
ஆருஷியை போன்றே இதற்கு முன் 5 இந்து பெண்களுக்கு இஸ்லாமியர்கள் நடத்தும் அஞ்சுமான் கல்வி குழுவின் சார்பில் இதுபோல் இந்து முறைப்படியே திருமணம் நடத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. அதேபோல் 560 இஸ்லாமிய பெண்களுக்கு கூட்டாக திருமணம் செய்து வைத்து இருக்கின்றனர்.