ஆடைகளை களைந்து.. 80 வயசு பாட்டிக்கு ஏர்போர்ட்டில் நடந்த அவமானம்.. கொதிப்பான மக்கள்.. ஒருவர் சஸ்பெண்ட்
80 வயது பாட்டியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளனர்
கவுகாத்தி: 80 வயது பாட்டி என்றுகூட பாராமல், ஏர்போர்ட்டில் ஆடைகளை களைந்து அவமானப்படுத்தியிருக்கிறார்கள் அதிகாரிகள்... இந்த சம்பவம் தொடர்பான விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது!
நாகாலாந்தை சேர்ந்தவர் அந்த பாட்டி.. மொகலோ கிகோன் என்பது பெயர்.. இவர் ஒரு மாற்றுத்திறனாளி.. சமீபத்தில் இவர் தன்னுடைய பேத்தியுடன் டெல்லி செல்வதற்காக அசாம் மாநிலம் கவுகாத்தி ஏர்போர்ட்டிற்கு சென்றிருக்கிறார்.
மாற்று திறனாளி என்பதால், வீல் சேரில் உட்கார்ந்துதான் சென்றார்.. அப்போது அங்கிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள், பாட்டி - பேத்தி இருவரையும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்தார்கள்..

கொடுமை
இந்த சோதனையின்போது மொகலோ கிகோன் இடுப்பு பகுதியில் இருந்து, திடீரென ஒருவிதமான சத்தம் வந்துள்ளது. பாட்டிக்கு கடந்த மாதம்தான், இடுப்பில் ஆபரேஷன் செய்திருக்கிறார்கள்.. அதனால், டைட்டானியம் பிளேட் வைக்கப்பட்டுள்ளது.. அந்த சத்தம் தான், சோதனையில் தெரியவந்தது.. ஆனாலும், பாதுகாப்பு படையினருக்கு பாட்டி மேல் சந்தேகம் வந்தது.. ஒருவேளை அவர் இடுப்பு பகுதியில் ஏதாவது மறைத்து வைத்து கடத்தி செல்லலாம் என்று சந்தேகித்தனர்..

எதிர்ப்பு
அதனால், உடனே பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் ஒருவர் அவரை சோதனை செய்ய முயன்றார்... இதற்கு பாட்டி எதிர்ப்பு தெரிவித்தார்.. ஆபரேஷன் செய்து பிளேட் வைத்ததால்தான் அப்படி சத்தம் வருகிறது என்று விளக்கி உள்ளார். எனினும், அவர் சொல்வதை யாருமே கேட்கவில்லை.. பிளேட் வைத்ததற்கான அத்தாட்சி உடனே தேவை அல்லது சோதனை செய்தே ஆக வேண்டும் என்று சொல்லி வலுக்கட்டாயமாக, பாட்டியின் ஆடையை களைந்து சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது..

பாட்டி
இதனால் பாட்டியும், பேத்தியும் மேலும் அதிர்ந்து போனார்கள்.. இது தொடர்பாக அவரது மகள் டோலி கிகோன் ஏர்போர்ட் அதிகாரிகளிடம் எழுத்துப்பூர்வமாக புகார் தந்தார்.. மேலும் இந்த விஷயத்தை ட்விட்டரிலும் பதிவிட்டுவிட்டார்.. உடல்நலம் பாதிக்கப்பட்ட முதியோரை இப்படித்தான் நடத்துவதா என கேள்வி எழுப்பியிருந்தநிலையில், இந்த சம்பவம், ட்விட்டரில் வைரலானது.. பல தரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.. இது குறித்த தகவல், மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்யா சிந்தியா வரைக்கும் சென்றுவிட்டது.. உடனடியாக சம்பவம் குறித்து விசாரணை நடத்த அவரும் உத்தரவிட்டார்.

விசாரணை
இப்போது, அந்த விமான நிலைய பாதுகாப்பு படையை சேர்ந்த பெண்ணிடம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த விசாரணை முடிவில் அவர் இந்த செயலில் ஈடுபட்டு இருப்பது உறுதியானால், அவர் மீது சஸ்பெண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.. ஆனால், மூதாட்டியின் ஆடையை களையக் கோரிய வீரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. வயதான மூதாட்டியின் உடைகளை முழுமையாக களைந்து சோதனையிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications