சரிப்படாவிட்டால் வேலையை விட்டுத் தூக்கிருவேன்... மன்மோகனை எச்சரித்த நரசிம்ம ராவ்!
டெல்லி: 1991ம் ஆண்டு.. நல்ல தூக்கத்தில் இருந்து அப்போதுதான் கண் விழித்திருந்தார் மன்மோகன் சிங். போன் வந்தது. மறு முனையில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். உங்களை நிதியமைச்சராக நியமிக்க முடிவு செய்துள்ளேன். ஆனால் நீங்கள் கூறும் பொருளாதார தாராளமயமாக்கல் திட்டம் சரிவராவிட்டால் வேலையை விட்டுத் தூக்கிருவேன் என்று சிரித்தபடி கூறினார் ராவ்.
முன்னதாக நிதியமைச்சராக நியமிக்கும் முடிவை பிரதமரின் முதன்மைச் செயலாளர் பி.சி.அலெக்சாண்டர்தான் சிங்கிடம் தெரிவித்தார். அதன் பின்னர் ராவ் பேசினாராம்.
மன்மோகன் சிங்கின் மகள் தமன் சிங் எழுதியுள்ள "Strictly Personal: Manmohan and Gursharan" என்ற நூலில் இந்த சுவாரஸ்யமான தகவலைத் தெரிவித்துள்ளார்.

முழு ஆதரவு கொடுத்தார் ராவ்
தனது மகளுக்கு இந்த நூலுக்காக சிங் அளித்த பேட்டியில், அந்த முடிவை நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஏற்றுக் கொண்டேன். தாராளமயமாக்கல் திட்டத்தை நான் பிரதமர் ராவிடம் வைத்தபோது அவர் அதை ஏற்றார். முழுமையாக ஆதரித்தார்.

முதலில் தயங்கினார்
ஆனால் அவர் முதலில் தயங்கத்தான் செய்தார். நான்தான் அவரை சமாதானப்படுத்தி ஒப்புக் கொள்ள வைத்தேன். பின்னர் அவர் சம்மதித்தார்.

வேலையை விட்டு தூக்கிருவேன்
அதன் பின்னர் என்னிடம், நீங்கள் சொன்னபடி செய்து பார்ப்போம். சரிப்படாவிட்டால் உங்களைத் தூக்கிருவேன் சரியா என்று சிரித்தபடி கூறினார் ராவ். அதேசமயம், நான் சொன்னபடி நடந்தால் அத்தனை பெருமைகளையும் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்றும் ராவ் கூறினார்.

அவசர நிலை ஆச்சரியம்
1975ம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட அவசர நிலை என்னை ஆச்சரியப்படுத்தியது. வியப்பாகவும் இருந்தது. அப்போது நாட்டில் ஸ்திரத்தன்மை இல்லை. ஆனால் இந்திரா காந்தி இந்த அளவுக்குத் தீவிரமாகப் போவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. எனக்கே ஆச்சரியமாக இருந்தது.

நல்ல விஷயமும் நடந்தது
ஆனால் அரசு ஊழியர்கள் மத்தியில் அது ஒழுக்கம், நேரம் தவறாமை, கட்டுப்பாடு ஆகியவற்றைக் கொண்டு வர உதவியது. எனவே சில நல்லதும் நடந்தது.

முறைப்பு காட்டிய மொரார்ஜி
அடுத்த பொதுத் தேர்தலில் மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அவர் நான், முந்தைய காங்கிரஸ் அரசுக்கு நெருக்கமானவன் என்று நினைத்து விட்டார். எனவே சற்று இறுக்கமாகவே என்னுடன் பழக ஆரம்பித்தார். ஆனால் அதன் பின்னர் என்னைப் புரிந்து கொண்டார். பாசம் காட்ட ஆரம்பித்தார்.

ஆனால் நிதானமானவர்
மொரார்ஜி தேசாய் நிதானமானவர், அனைத்துத் திறமைகளும் சரிசமமாக வைத்திருந்தவர். பலர் அவரை முரட்டுத்தனமானவர் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர். ஆனால் அவர் அப்படி இல்லை. புரியும் வகையில் சொன்னால், அது சரியாக இருந்தால் உடனே ஏற்றுக் கொள்வார் என்று கூறியுள்ளார் மன்மோகன் சிங்.












Click it and Unblock the Notifications