நாகாலாந்தில் மீண்டும் என்டிபிபி - பாஜக கூட்டணி ஆட்சி.. 5வது முறையாக முதல்வர் ஆகும் நெய்பியூ ரியோ!
நாகாலாந்தின் மூத்த அரசியல் தலைவர் நெய்பியூ ரியோ 5வது முறையாக முதல்வராக பதவியேற்க உள்ளார்
கோஹிமா: நாகாலாந்தின் நீண்ட கால முதலமைச்சரான நெய்பியூ ரியோ, தற்போது கிடைத்துள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.
நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றியது.
இதன் மூலம் 5வது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.

3 மாநில தேர்தல்
கடந்த மாதம் 16-ஆம் தேதி திரிபுராவிலும், 27-ஆம் தேதி மேகாலயா, நாகாலாந்திலும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 வடகிழக்கு மாநிலங்களில் பதிவான வாக்குகளும் நேற்று எண்ணப்பட்டன. திரிபுராவில் உள்ள 60 தொகுதிகளில் பாஜக 32 தொகுதிகளிலும், ஐபிஎப்டி ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. ஆட்சி அமைக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கிறது. மேகாலயாவில் 59 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. ஆளும் தேசிய மக்கள் கட்சி 26 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஐக்கிய ஜனநாயகக் கட்சி 11, காங்கிரஸ் 5, தேசியவாத காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பாஜக 2 இடங்களில் வென்றது.

நாகாலாந்து
நாகாலாந்தில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் கிறிஸ்தவர்கள் 87.9 சதவீதம் உள்ளனர். இந்துக்கள் 8.7 சதவீதம் பேரும் முஸ்லிம்கள் 2.5 சதவீதம் பேரும், புத்த மதத்தினர் 0.3 சதவீதம் பேரும் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தலில் என்டிபிபி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இதில் என்டிபிபி 25, பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பெரும்பான்மையை நிரூபிக்க 31 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், பாஜக கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துள்ளது.

5வது முறையாக
நாகாலாந்து முதல்வரும், என்டிபிபி மூத்த தலைவருமான நெய்பியூ ரியோ மீண்டும் முதல்வராகப் பதவியேற்க உள்ளார். என்டிபிபி மூத்த தலைவர் நெய்பியூ ரியோ கடந்த 2003-ஆம் ஆண்டில் முதல்முறையாக நாகாலாந்து முதல்வராக பதவியேற்றார். கடந்த 2008, 2013, 2018 ஆகிய ஆண்டுகளில் அடுத்தடுத்து முதல்வராகப் பதவியேற்றார். தற்போதைய நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் என்டிபிபி, பாஜக கூட்டணி வெற்றி பெற்றிருப்பதால் 5-வது முறையாக அவர் முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

நெய்பியூ ரியோ
அங்கமி நாகா குடும்பத்தில் கடந்த 1950ஆம் ஆண்டு பிறந்த நெய்பியூ ரியோ, கோஹிமாவில் உள்ள பள்ளியில் ஆரம்பகல்வி பயின்றார். பின்னர் மேற்கு வங்கத்தின் புருலியாவில் உள்ள சைனிக் பள்ளியில் சேர்ந்தார். டார்ஜிலிங், கொஹிமாவில் உள்ள கல்லூரிகளில் பட்டப்படிப்பை நிறைவு செய்தார். கடந்த 1987-ஆம் ஆண்டில் அரசியலில் கால் பதித்த நெய்பியூ ரியோ ஐக்கிய ஜனநாயக முன்னணி, காங்கிரஸ், நாகா மக்கள் முன்னணி உள்ளிட்ட கட்சிகளில் இருந்தார்.

2003ல்
2003ல் முதல் முறையாக முதலமைச்சரானார் நெய்பியூ ரியோ. 2008ல் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டபோது, முதல்வர் பதவியை இழந்தார். 2 மாதங்களில் தேர்தலில் வென்று மீண்டும் முதல்வர் ஆனாலர். 2013ல் மீண்டும் வென்று மூன்றாவது முறையாக முதல்வர் ஆனார். பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டில் சொந்தக் கட்சியான நாகா மக்கள் முன்னணியில் ஏற்பட்ட உட்கட்சி மோதலைத் தொடர்ந்து என்.டி.பி.பி கட்சியில் இணைந்தார். 2018ல் பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது என் டி பிபி.

மீண்டும் ஆட்சி
இந்த தேர்தலில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி 2018 இல் இருந்த அதே 40- 20 சீட்-பகிர்வு ஃபார்முலாவுடன் களத்தில் இறங்கியது. இதில் என்டிபிபி 25, பாஜக 12 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. ஆட்சி அமைக்க 31 சீட்கள் தேவை என்ற நிலையில், என்.டி.பி.பி - பாஜக கூட்டணி ஆட்சி மீண்டும் அமைகிறது. நெய்பியூ ரியோ ஐந்தாவது முறையாக நாகாலாந்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார்.












Click it and Unblock the Notifications