கர்நாடகா தேர்தலுக்கு ஸ்பெஷலாக புது ஓட்டு மெஷின் வருகிறது... வசதிகளை கேட்டால் ஆச்சரியப்படுவீர்கள்!
அடுத்த மாதம் நடக்க உள்ள கர்நாடகா சட்டசபை தேர்தலில் புதிய நவீன வசதிகள் கொண்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
டெல்லி: கடைசியாக நடந்த பல தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி நடந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன. இந்த நிலையில் கர்நாடகாவில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில் இந்த குற்றச்சாட்டை கூற முடியாது. புதிய நவீன வசதிகள் கொண்ட, யாரும் மோசடி செய்ய முடியாத வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.
கடைசியாக நடந்த பல சட்டசபை தேர்தல்களில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. ஆனால், அதில் திருத்தம் செய்யப்பட்டு, மோசடி நடந்ததாக எதிர்க்கட்சிகள் புகார் கூறின. புளூடூத் மூலம் ஓட்டுக்களை ஒரு கட்சிக்கே பதிவாகும்படி செய்துள்ளனர் என்றும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. ஆனால் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் தொடர்ந்து கூறி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடகா சட்டசபைக்கு அடுத்த மாதம் 12ம் தேதி நடக்கும் தேர்தலில், மூன்றாம் தலைமுறை ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மார்க் 3 என்ற இந்த புதிய கட்டுப்பாட்டு கருவி, பெங்களூருவில் உள்ள ஆர்ஆர் நகர், சாம்ராஜ்பேட், சிக்பெட், சிவாஜிநகர், சாந்திநகர், காந்தி நகர் மற்றும் ராஜாஜி நகர் ஆகிய ஏழு சட்டசபை தொகுதிகளில் பயன்படுத்தப்பட உள்ளது.
இந்த தொகுதிகளில் உள்ள, 1,800 வாக்குச் சாவடிகளில், 2700 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், 2,250 கட்டுப்பாடு கருவிகள், 2,350 ஓட்டுப் பதிவை உறுதி செய்யும் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

384 வேட்பாளர்களை பதிவு செய்யலாம்
இந்த மார்க் 3 கட்டுப்பாடு கருவியில் ஒரே நேரத்தில் 24 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை இணைக்க முடியும். அதாவது, 384 வேட்பாளர்கள் பெயர்களை சேர்க்க முடியும். அதே நேரத்தில் இதுவரை பயன்படுத்தப்படும் மார்க் 2 கட்டுப்பாடு கருவியில் அதிகபட்சம், 64 வேட்பாளர்கள் பெயர்கள் கொண்ட 4 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை மட்டுமே இணைக்க முடியும்.

மோசடிக்கு வாய்ப்பே இல்லை
இந்த மார்க் 3 கட்டுப்பாடு கருவி மற்றும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் எந்த மோசடியும் செய்ய முடியாது என்று தேர்தல் கமிஷன் அடித்து கூறுகிறது. சாப்ட்வேர் பிரச்னை ஏற்பட்டால் தானாகே கண்டுபிடித்து, அதை சரி செய்து கொள்ளும் வசதி இதில் உள்ளது. அதேபோல் டிஜிட்டல் கையெழுத்து மூலம் இயக்கப்படுவதால், மற்றவர்கள் இதில் கையை வைக்கவே முடியாது.

புதிய சாப்ட்வேரில் செயல்படும்
மேலும் இந்த புதிய கருவியில் உள்ள புதிய வகை மைக்ரோ சிப்பை ஒருமுறை புரோகிராமிங் செய்துவிட்டால், அதை மாற்றவே முடியாது. அதேபோல் இந்த சிப்பில் உள்ள சாப்ட்வேரை பதிவு செய்வது அல்லது திருத்துவது போன்றவையும் செய்ய முடியாது. அதேபோல் இன்டர்நெட் உள்பட வேறு எந்த வழிகளிலும் இந்த புதிய வாக்குப் பதிவு இயந்திரத்தை செயல்படுத்த முடியாது.

வைரஸ் தாக்க முடியாது
இந்த புதிய கருவியில் ஆப்பரேட்டிங் சிஸ்டம் எதுவும் கிடையாது என்பதால், வைரஸ் தாக்கும் பிரச்னையும் கிடையாது. முந்தைய கருவிகளில் இல்லாத மற்றொரு வசதி, இந்த கருவியின் பேட்டரியின் அளவை தெரிந்து கொள்ள முடியும்.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் முதல் முறையாக இந்த கருவி பயன்படுத்தப்பட உள்ளது. அதன் வெற்றியைப் பொருத்து, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதிக அளவில் பயன்படுத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications