அடுத்த கார்கில் 'அந்தமான் நிகோபார்': முன்னாள் கடற்படை தளபதி 'வார்னிங்'
பனாஜி: கார்கிலைப் போல இந்தியாவின் அடுத்த யுத்த களமாக அந்தமான், நிக்கோபார் தீவுகள் உருவெடுத்துள்ளன என்று முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.
கோவா மாநில தலைநகர் பனாஜியில் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்திய கடலோர மற்றும் தீவுகளின் பாதுகாப்பு குறித்த 2 நாள் கருத்தரங்கை நடத்தியது.
இந்தக் கருத்தரங்கில் கலந்து கொண்ட முன்னாள் இந்திய கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ் பேசுகையில், 1965ஆம் ஆண்டு இந்தியா- பாகிஸ்தான் போரின் போது பாகிஸ்தானுக்காக ஆதரவாக நாட்டின் தென்பகுதியில் சில தீவுகளை ஆக்கிரமிக்க இந்தோனேசிய அதிபர் சுகர்னோ உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் அப்படி எதுவும் நிகழ்வதற்கு முன்பே யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. தற்போதும் அந்தமான் நிகோபார் தீவுகளில் போதைப்பொருள் கடத்தல்காரர்கள், தந்தம் கடத்துபவர்கள், பயங்கரவாத குழுக்கள் ஆகியோர் ஆக்கிரமித்து வருகின்றனர்.
இது கார்கில் போர் சூழ்நிலையை ஏற்படுத்துமோ என அச்சுறுத்தலை உருவாக்குகிறது. கார்கிலைப் போன்ற அடுத்த போர் முனையாக அந்தமான் நிகோபார் தீவுகள் இருக்கலாம்.
இவ்வாறு கடற்படை தளபதி அட்மிரல் அருண் பிரகாஷ் கூறினார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் ஆயுதமேந்திய தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது என்று இந்திய ராணுவ தளபதிகள் கூறி வரும் நிலையில் வங்காள விரிகுடாவிலும் ஆபத்து மையம் கொண்டிருக்கிறது என்று முன்னாள் தளபதி எச்சரிக்கை விடுத்திருப்பது பாதுகாப்பு வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications