பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் ஒருவரை கைதுசெய்தது தேசிய புலனாய்வு பிரிவு
கொல்கத்தா: பர்த்வான் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சேக் ரக்மதுல்லா என்ற சாஜித்தின் உதவியாளரை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலம் பர்த்வானில் வீடு ஒன்றில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தயாரித்த போது கடந்த அக்டோபர் மாதம் 2-ந் தேதி வெடிகுண்டு வெடித்தது. இக் குண்டு வெடிப்பில் சாகில் அகமது, சோவன் என்னும் இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், ஹாசன் சாகிப் என்பவர் படுகாயம் அடைந்தார்.
குண்டுவெடிப்பு தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குண்டுவெடிப்பு நடந்த வீட்டில், வெடிகுண்டுகளுக்கு பயன்படுத்தப்படும் ரசாயன பொருட்கள், வெடிகுண்டு தயாரிப்பதற்கான வழிகாட்டி புத்தகம், ஜிகாதி புத்தகம், ஜிகாதி பயிற்சி வீடியோ மற்றும் பர்த்வான் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளின் வரைபடம், சிம் கார்டு ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டு வங்கதேசத்துக்கு அனுப்பப்பட்டதும், வங்கதேசத்தைச் சேர்ந்த தீவிரவாத இயக்கமான ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்கதேசம் அமைப்புக்கு தொடர்பு இருந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில் குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சேக் ரகமதுல்லாவின் உதவியாளர் என்று சந்தேகிக்கப்படும் முபாஷ்சில் ஹக் என்பவரை தேசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர். இவர் முர்ஷிதாபாத் மதர்ஸாவில் ஜமாத்-உல்-முஜாகிதீன் வங்கதேச தீவிரவாத இயக்கத்திற்கு ஆள்சேர்க்க முகாம் நடத்தியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரையில் பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வங்கதேச எல்லையில் உள்ள மோகிம்நகர் பகுதியில் முபாஷ்சில் ஹக் கைது செய்யப்பட்டார்.
பர்த்வான் குண்டுவெடிப்பில் கடந்த நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட சேக் ரகமதுல்லா என்ற சாஜித்தின் கூட்டாளிதான் முபாஷ்சில் ஹக் என்று தெரியவந்துள்ளது. சாஜ்ஜித்திடம் விசாரணை நடத்தியபோது முபாஷ்சில் ஹக் பெயர் வெளியேவரவில்லை என்றும், குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட மேலும் 4 பேரிடம் விசாரணை நடத்தியபோது ஹக்கிற்கு எதிரான ஆவணங்கள் கிடைத்தது என்று தெரியவந்துள்ளது.
பர்த்வான் குண்டுவெடிப்பு தொடர்பாக தேசியபுலனாய்வு பிரிவு விசாரணை நடத்தியதை அடுத்து மேற்கு வங்காளத்தின், பர்த்வான், பிர்பும், மால்டா, நாதியா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் தீவிரவாத இயக்கம் தங்களது நெட்வோர்க்கை தொடங்கியிருந்தது தெரியவந்தது. முர்ஷிதாபாத்தின் பெல்டான்கா மற்றும் முகிம் நகர் உள்ளிட்ட பகுதியில் தீவிரவாதத்திற்கு ஆள்சேர்க்கும் முகாம் மற்றும் குண்டு தயாரிக்க பயிற்சி அளிக்கும் முகாம்கள் தீவிரவாத இயக்கத்தினரால் நடத்தப்பட்டதும் தெரியவந்தது.












Click it and Unblock the Notifications