‘இந்தியாவின் மகளாக’.. நிர்பயா ஆவணப் படம்.. மார்ச் 8 சர்வதேச மகளிர் தினத்தில் ரிலீஸ்!
டெல்லி: ஐயம் ஸாரி மம்மி என்னால் இந்த வலி, வேதனைகளை தாங்க முடியவில்லை என்று மரணத்திற்கு முன்னர் நிர்பயா உதிர்த்த கடைசி வார்த்தை. இதற்குப் பின்னர் அந்த பெண்ணின் இறுதி மூச்சு நின்று போனது
நாட்டில் முதல் முறையாக பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை அளிக்கப்பட்ட "நிர்பயா" சம்பவம் இப்போது நினைத்தாலும் பெரும் பதட்டத்தை உண்டாக்கக்கூடியது.

இந்தியாவில் தினந்தோறும் எத்தனையோ பலாத்கார சம்பவங்கள் நடந்தேறினாலும் 2012ஆம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவக் கல்வி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சம்பவத்துக்குப் பிறகு பெண்களின் பாதுகாப்பு குறித்து எத்தனையோ கேள்விகள் அரசுகளிடம் கேட்கப்பட்டன. எத்தனையோ போராட்டங்கள் நடத்தப்பட்டன. முதல் முறையாக பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனையும் விதிக்கப்பட்டது.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான நிர்பயா பற்றிய ஆவணப்படம் ‘இந்தியாவின் மகள்' என்ற பெயரில் வரும் மார்ச் 8ஆம் தேதி என்டிடிவி தொலைக்காட்சியில் வெளியாக உள்ளது.
நிர்பயா பலாத்காரம்
டாமினி, நிர்பயா, அமானத் எனும் புனைப்பெயர்களால் அழைக்கப்படும் பிஸியோதெரபி மாணவி கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி டெல்லியில் தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பும் வழியில் ஓடும் பேருந்தில் வைத்து ஒரு குடிகார கும்பல் ஒன்று அவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாது அவரை கொடூரமாக தாக்கி சாலையோரம் வீசியது. உடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்.
13 நாள் போராட்டம்
உயிருக்கு போராடிய அந்த மாணவி செயற்கைச்சுவாச உதவியுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் டிசம்பர் 26 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், 13 நாள் நரக வேதனைக்கு பின்னர் டிசம்பர் 29 அன்று அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
மகளிர் அமைப்புகள் போராட்டம்
இது நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல மகளிர் அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்களின் பாதுகாப்புக்காக தனி தொலைபேசி எண் உருவாக்கப்பட்டது.
மரணதண்டனை
இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ராம்சிங், அவரது சகோதரர் முகேஷ்சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உட்பட ஆறு நபர்களும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். நீதிமன்றத்தில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தூக்கிலிட்டுக்கொண்டான். மற்ற நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தியாவின் மகள்
இந்த சம்பவத்தை மையப்படுத்தி இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் என்பவர் ஆவணப்படம் தயாரித்துள்ளார். ‘இந்தியாவின் மகள்' என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தில் பல்வேறு தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நான் பொறுப்பல்ல
இந்த வழக்கில் கைதான கார் டிரைவர் முகேஷ் சிங் என்பவர் சிறையில் இருந்தபடியே இந்த ஆவணப்படத்திற்காக பேசியுள்ளார். "நான் அந்த பெண்ணை பலாத்காரம் செய்யவில்லை. பாலியல் பலாத்காரத்திற்கு ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பொறுப்பு.
அமைதியாக இருங்கள்
பலாத்காரத்தின் போது எங்களை எதிர்த்து அந்த பெண் போராடியிருக்கக்கூடாது. அமைதியாக இருந்திருக்க வேண்டும்" என்று சர்ச்சைக்குரிய கருத்துக்களை முகேஷ் சிங் தெரிவித்திருக்கிறார்.
மார்ச் 8-ம் தேதி சர்வதேச மகளிர் தினத்தன்று இந்த ஆவணப்படம் என்டிடிவி தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications