பாஜகவின் "பிரி்த்தாளும்" சூழ்ச்சியை முறியடித்து வெற்றிக் கொடி நாட்டிய நிதீஷ் - லாலு
பாட்னா: மோடி ஆட்சிக்கு வந்த விதமே, பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு முக்கிய அம்சம்தான். நாடு முழுவதும் முக்கியக் கட்சிகளின் கூட்டணியை பிரித்து சிதைத்து தனக்கு சாதகமான நிலையை உருவாக்கிக் கொண்டுதான் லோக்சபா தேர்தலைச் சந்தித்தது பாஜக. மோடி வென்றார். கடைசியில் அதை அலை என்று கூறி விட்டனர்.. உண்மையில் அது சதி வலை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குப் பிறகும் கூட இதேபோன்ற பிரித்தாளும் சூழ்ச்சியை தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது பாஜக. இதை உணர்ந்துதான், பீகார் தேர்தலில் லாலுவும், நிதீஷும் கை கோர்த்து உறுதியாக நின்று பாஜகவின் முயற்சியை முறியடித்துள்ளனர்.
இந்த் கூட்டணிக்கும் மூடு விழா காண முயற்சிகள் நடந்தன. தெரிந்தோ தெரியாமலோ முலாயம் சிங் யாதவும் இதில் சிக்கப் பார்த்தார். அவருக்கும், கூட்டணிக்கும் இடையே பிரச்சினைகள் வெளிக்கிளம்பின.
ஆனால் நிதீஷும், லாலுவும், காங்கிரஸும் உறுதியாக நின்று விட்டனர். காரணம் கூட்டணி உடைந்தால் அது பாஜகவுக்கு லட்டை எடுத்து வாயில் வைத்து தின்னவும் செய்த கதையாகி விடும் என்பதை நிதீஷும், லாலுவும் நன்றாக உணர்ந்திருந்தனர்.

மஞ்சி துரோகத்தால் சுதாரித்த நிதீஷ் குமார்
எப்போது மஞ்சி கட்சிக்கும், தனக்கும் துரோகம் செய்தாரோ அன்றே நிதீஷ் குமாருக்குப் புரிந்து விட்டது பாஜக தனது திருவிளையாடலை ஆரம்பித்து விட்டது என்பது.

கெளரவம் பார்க்காமல்
மஞ்சியின் செயலால் அதிர்ச்சி அடைந்த அவர் கட்சியையும், ஆட்சியையும் மீண்டும் கைப்பற்றியதோடு, ஈகோ பார்க்காமல், கெளரவரம் பார்க்காமல், லாலு, முலாயம் சிங், காங்கிரஸுடன் பேசி பெரும் கூட்டணி அமைக்கும் வேலையில் இறங்கினார்.

இறங்கி வந்த லாலு
இந்த முயற்சிக்கு லாலு பிரசாத் யாதவ் இறங்கி வந்தார். இணைந்து செயல்பட முன்வந்தார். முலாயமையும் கூட்டணிக்கு சம்மதிக்க வைத்தார். காங்கிரஸையும் இழுத்து வந்தார். இறுதியில் இந்த மெகா கூட்டணி நனவானது.

அதிர்ச்சி அடைந்த "சிங்கம்"
இப்படி நிதீஷ் குமார் பெரும் கூட்டணியை அமைத்ததால் அதிர்ச்சி அடைந்தது பாஜக. பசுக்கள் தனித் தனியாக வரும், வேட்டையாடி வீழ்த்தலாம் என்று காத்திருந்த சிங்கம், அத்தனை பசுக்களும் சேர்ந்து வந்ததால் பீதி அடைந்து ஓடியதைப் போல பாஜகவும் பயந்து போனது.

தேவையற்ற பேச்சுக்கள்
இப்படி நிதீஷ் குமார் ஒருபக்கம் அருமையான கூட்டணியை அமைத்தார் என்றால் மறுபக்கம் பாஜகவினரின் பேச்சுக்களும், செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும், முகச் சுளிப்பையும் ஏற்படுத்தின. குறிப்பாக மாட்டுக் கறி விவகாரம் முஸ்லீம் வாக்காளர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி பாஜகவை புரட்டிப் போட்டு விட்டது.

ஒற்றுமையே வெற்றி
மொத்தத்தில் இந்தத் தேர்தலில் பாஜகவின் சதிகளுக்கு சற்றும் இடம் கொடுக்காமல் ஒற்றுமையாக நின்று உறுதியாக தேர்தலைச் சந்தித்து தில்லான வெற்றியைப் பெற்றுள்ளது நிதீஷ் தலைமையிலான கூட்டணி.
ஒன்றாக நின்று தைரியமாக தேர்தலைச் சந்தித்தால் மோடியாகவே இருந்தாலும் ஜம்மென்று வெல்லலாம் என்பதே இந்த பீகார் தேர்தல் சொல்லும் பாடமாக உள்ளது.












Click it and Unblock the Notifications