பிரதமர் வேட்பாளர் மோடியை மாற்றுவதா... நோ சான்ஸ்!- ராஜ்நாத் சிங்

பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் அமித் ஷா, குஜராத் மாநில அரசில் அமைச்சராக ஏற்கனவே பதவி வகித்து வந்தவர். குஜராத் முதல்வரும் பா.ஜனதா பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடிக்கு மிகவும் நெருக்கமானவர்.
5 மாநில தேர்தல் சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது நரேந்திர மோடிக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே கடுமையான சொற்போர் நடந்து வருகிறது. தற்போது நரேந்திரமோடிக்கு எதிராக புதிய பிரச்சினை ஒன்றை காங்கிரஸ் கிளப்பியுள்ளது.
அமித்ஷா குஜராத் அமைச்சராக இருந்தபோது ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி ஜி.எல்.சிங்கால் மூலம் இளம் பெண் ஒருவரையும், அந்தப் பெண்ணுக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரையும் சட்டவிரோதமாக கண்காணிக்கும்படி உத்தரவிட்டதுதான் பூதாகரமாகக் கிளம்பியுள்ளது.
ஆட்சி அதிகாரத்தை தவறாக பயன்படுத்திய இந்த விவகாரத்தில், அமித்ஷாவுக்கும் போலீஸ் அதிகாரி சிங்காலுக்கும் இடையே நடைபெற்ற டெலிபோன் உரையாடலை இரு புலனாய்வு வலைத் தளங்கள் வெளியிட்டுள்ளன. குஜராத்தில் நடைபெற்ற இர்ஷத் ஜகான் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் போலீஸ் அதிகாரி சிங்கால் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த உரையாடல் அடங்கிய டேப்பை, சிங்கால் சி.பி.ஐ.யிடம் கொடுத்து இருப்பதாகவும், அதில் உள்ள தகவல்கள் போலி என்கவுன்டர் அல்லது வேறு எந்த வழக்குகளுடனும் தொடர்புடையதா? என்று சி.பி.ஐ. விசாரிக்க ஆரம்பித்துள்ளது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் கபில்சிபல், மிக தீவிரமான இந்த பிரச்சினை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், அமித் ஷாவுக்கு நெருக்கமாக இருந்த நரேந்திரமோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை பா.ஜனதா மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி இருந்தார்.
ஆனால், அமித் ஷாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டை பா.ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் முழுமையாக நிராகரித்தார். அத்துடன், இதே போன்ற ஆதாரமற்ற 1000 குற்றச்சாட்டுகளை கூறினாலும், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும், அவர் திட்டவட்டமாக அறிவித்தார்.
தேர்தல் நெருங்கி வருவதால், இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சியின் 'கீழ்த்தரமான ஏமாற்று வித்தை' பிரிவினர் அள்ளி வீசுவதாகவும், இதற்குப்பதிலாக, காங்கிரஸ் கட்சி தன்னுடைய பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முதலில் அறிவிக்கட்டும் என்றும் ராஜ்நாத்சிங் பதில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications