ஜன. 1: மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு திருப்பதி கோவிலில் அனுமதி கிடையாதாம்...
திருப்பதி: ஆங்கில புத்தாண்டு அன்று மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தைகளுடன் வரும் பக்தர்கள், வயது முதிர்ந்தோருக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை. 1, 2-ந்தேதிகளில் கோவிலில் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான தரிசனம் செய்ய லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஜனவரி 1ம் தேதி ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. அன்று சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
இதுதொடர்பாக திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜு கூறியதாவது:-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஏராளமான விழாக்கள் நடக்கிறது. அதில், 2014-ம் வருடத்தின் தொடக்க நாளான ஜனவரி 1-ந்தேதி ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஜனவரி 1-ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் கோவிலின் பிரதான நுழைவு வாயில் கதவுகள் திறக்கப்படுகின்றன.

விஐபி தரிசனம்
கோவிலில் திருப்பாவை பாசுரம், சிறப்பு பூஜைகள் முடிந்ததும், 1.30 மணியளவில் வி.ஐ.பி. தரிசனம் தொடங்குகிறது. வி.ஐ.பி.களுக்கு கோவிலில் லகு தரிசனம் (அருகில் நின்று வழிபடுவது) ஏற்பாடு செய்யப்படுகிறது. வி.ஐ.பி. தரிசன கட்டணம் ரூ.1000 ஆகும். 1-ந்தேதி சுமார் ஆயிரம் வி.ஐ.பி.களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

6 பேருக்கு அனுமதி
ஒவ்வொரு வி.ஐ.பி. டிக்கெட்டுக்கும் தலா 6 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அந்த 6 பேரும் தங்களின் குடும்பத்தாரை சேர்ந்தவர்களாகவே இருக்க வேண்டும். வி.ஐ.பி. தரிசனத்தில் வந்து சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் கண்டிப்பாக தங்களுக்கான அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்.

சிபாரிசு கடிதம் கட்
வி.ஐ.பி.கள், டிக்கெட் வாங்குவதற்காக தங்களின் உதவியாளர்கள், குடும்பத்தார்கள், நண்பர்களை அனுப்பி வைக்காமல், தாங்களாகவே நேரடியாக கோவிலுக்கு வந்து வி.ஐ.பி. தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும்.
வி.ஐ.பி. தரிசன டிக்கெட் வாங்க சம்பந்தப்பட்டவர்கள் கொடுக்கும் சிபாரிசு கடிதங்களும் நிராகரிக்கப்படும்.

பாதையாத்திரை பக்தர்கள்
திருப்பதி மலைப்பாதைகள் வழிகாக நடந்து வரும் திவ்ய தரிசன பக்தர்களுக்கு டிசம்பர் 31-ந்தேதி நள்ளிரவு 12 மணியளவில் நாராயணகிரி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கியூ லைனில் இருந்து தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். புத்தாண்டு தினத்தில் திவ்ய தரிசன பக்தர்கள் சுமார் 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இலவச தரிசனம்
இலவச தரிசனத்தில் வரும் பக்தர்களுக்கு டிசம்பர் 31-ந்தேதி மாலை 5 மணியளவில் திருமலையில் உள்ள எம்.பி.சி.26 தங்கும் விடுதி அருகில் உள்ள கியூ லைனில் இருந்து தரிசனத்திற்கு அனுமதிப்படுகின்றனர்.
இலவச தரிசனத்தில் வரும் பக்தர்கள் சுமார் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். புத்தாண்டு அன்று அதிகாலையில் வி.ஐ.பி. தரிசனம் முடிந்ததும், அதைத்தொடர்ந்து இலவச தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

ரூ.300 சிறப்பு தரிசனம் கட்
ஆங்கில புத்தாண்டையொட்டி 1-ந்தேதி 300 ரூபாய் கட்டண பிரத்யேக பிரவேச தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. ஆங்கில புத்தாண்டையொட்டி நாடு முழுவதும் உள்ள திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையங்களில் முன்னதாகவே இ.தரிசனம் மூலமாக 50 ரூபாய் கட்டண சிறப்பு தரிசனத்தில் புதிவு செய்துள்ள பக்தர்களில் சுமார் 4 ஆயிரத்து 800 பேருக்கு மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications