வங்க கடலில் புயல் சின்னம்- இப்பவே களத்தில் குதித்த ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக்- ஏன் தெரியுமா?
புவனேஸ்வர்: வங்க கடலில் புயல் சின்னம் ஏற்பட்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் உடனடியாக களப் பணிகளை தொடங்கிவிட்டார் ஒடிஷா முதல்வர் ந்வீன் பட்நாயக். ஒடிஷாவின் அனைத்து கடலோர மாவட்டங்களும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
கோடை காலங்களில் ஏற்படக் கூடிய புயல்கள் மிக கடுமையாக ஒடிஷாவை தாக்கியிருக்கின்றன. இதனால்தான் இப்போதே புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒடிஷா அரசு மேற்கொள்ள தொடங்கி இருக்கிறது.

2019-ம் ஆண்டு ஏப்ரல் இறுதியில் உருவாகி மே தொடக்கத்தில் கரையை கடந்தது ஃபானி புயல் (Fani). இந்த புயல் இந்தியாவில் மொத்தம் 72 பேரை பலி கொண்டது. இதில் ஒடிஷாவில் மட்டும் 64 பேர் உயிரிழந்தனர். 2020-ம் ஆண்டு வங்க கடலில் உருவான அம்பன் அல்லது ஆம்பன் (Amphan) புயல் மேற்கு வங்கத்தை புரட்டிப் போட்டது. ஒடிஷாவும் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டது. 2021-ம் ஆண்டு யாஸ் புயல்.. இதுவும் கோடை காலத்தில் ஒடிஷாவை தாக்கியது. இப்புயலாலும் மிக மோசமாக ஒடிஷா பாதிப்படைந்தது.
இந்த நிலையில்தான் வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகக் கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது புயலாக உருவெடுக்குமா? என்பது கணிக்க இயலாத சூழ்நிலையில் கடந்த கால படிப்பினைகள் அடிப்படையில் இப்போதே ஒடிஷா மாநில அரசு களத்தில் இறங்கி உள்ளது.

ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நேற்று கடலோர மாவட்ட ஆட்சியர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் வங்கக் கடலில் புயல் உருவானால் மேற்கொள்ளக் கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் போதே பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டன. தற்போது முதலே ஒடிஷாவின் அனைத்து கடலோர மாவட்டங்களும் உஷார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications