பள்ளியில் அதிர்ச்சி.. சகோதரனை அடித்துவிட்டு, சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்ற கும்பல்.. ஒடிசா ஷாக்
புவனேஸ்வர்: ஒடிசாவில் மழைக்கு பள்ளியில் ஒதுங்கிய சகோதரனை அடித்து துரத்திவிட்டு 5 பேர் பலாத்காரம் செய்ய முயன்றதால் மைனர் பெண் கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து படுகாயமடைந்த சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒடிசா மாநிலம் கியான்ஜார் மாவட்டத்தை சேர்ந்தவர் 18 வயது நிரம்பாத மைனர் பெண். இவர் தனது சகோதரருடன், சகோதரி வீட்டுக்கு புறப்பட்டார்.
ஜாஜ்பூர் மாவட்டம் காலிங்கா நகரில் இரவில் பஸ்சில் இருந்து இறங்கினார். அப்போது அங்கு கனமழை பெய்தது. இதனால் அவர்கள் மழையில் நனைந்தனர்.

மழையால் பள்ளியில் தஞ்சம்
இந்நிலையில் அங்கு நின்ற சிலர் சிறுமி மற்றும் அவரது சகோதரர் ஆகியோரை அருகே உள்ள பள்ளியில் ஒதுங்கும்படி கூறினார். மழை நின்றபிறகு பள்ளியில் இருந்து செல்லும்படிஅறிவுறுத்தினர். அங்கு கனமழை பெய்ததால் இருவரும் பள்ளியில் ஒதுங்கி நின்றனர். இந்த வேளையில் அவர்கள் 5 பேரும் திடீரென்று சிறுமியை தவறான கண்ணோட்டத்தில் பார்த்துள்ளனர்.

பலாத்காரம் செய்ய முயற்சி
மேலும் அவரிடம் தகாத முறையில் நடக்க முயன்றனர். இதனை சிறுமியின் சகோதரர் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த 5 பேரும் சேர்ந்து அவரை தாக்கி அங்கிருந்து விரட்டியடித்தனர். மேலும் 5 பேரும் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி அவர்களிடம் இருந்து தப்பிக்க ஓடினார்.

மேற்கூரையில் இருந்து குதித்த சிறுமி
பள்ளி கட்டிடத்தின் மேற்கூரைக்கு சென்று ஒளிந்து கொண்ட சிறுமியை அவர்கள் கண்டுபிடித்து விரட்டினர். இதனால் செய்வதறியாது திகைத்த சிறுமி மேற்கூரையில் இருந்து கீழே குதித்தார். இதை பார்த்த 5 பேரும் அங்கிருந்து ஓடினார். இதற்கிடையே கீழே விழுந்து படுகாயமடைந்த சிறுமியை அவரது சகோதரர் மீட்டார். சிறுமி ஆபத்தான நிலையில் காளிங்கா நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

5 பேர் கைது
இதுகுறித்து காளிங்கா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். மேலும் 5 மர்மநபர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி காளிங்கா நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)பிபி ரவுத் கூறுகையில், "பாதிக்கப்பட்ட சகோதரரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.












Click it and Unblock the Notifications