மீண்டும் மாநிலமாகும் ஜம்மு காஷ்மீர்? ஓமர் அப்துல்லா தீர்மானத்துக்கு ஆளுநர் மானோஜ் சின்ஹா ஒப்புதல்
ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக ஓமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார். இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசத்தில் இருந்து மீண்டும் மாநிலமாக்கும் தீர்மானத்துக்கு துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ஒப்புதல் வழங்கி உள்ளார். இதனால் மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக மாறுகிறதா? என்ற பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் அரசியலமைப்பின் 370வது சட்டப்பிரிவை மத்திய அரசு நீக்கியது. அதன்பிறகு மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டது. அதன்படி ஜம்மு காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் மற்றொரு யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டது.

இதில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மட்டும் சட்டசபை தொகுதிகள் உள்ளன. லடாக்கில் சட்டசபை தொகுதிகள் இல்லை. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.
இந்நிலையில் தான் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசமான பிறகு முதல் முறையாக சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தம் 3 கட்டங்களாக தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. 90 சட்டசபை தொகுதிகள் உள்ள ஜம்மு காஷ்மீரில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 46 இடங்களில் வெல்ல வேண்டும். இந்த தேர்தலில் நான்கு முனை போட்டி இருந்தது. காங்கிரஸ் - ஓமர் அப்துல்லாவின் தேசிய மாநாட்டு கட்சி கூட்டணி அமைத்து களமிறங்கியது. பாஜகவும், முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி மற்றும் ஆம்ஆத்மி ஆகியவை தனித்து போட்டியிட்டன.
கடந்த 8 ம்தேதி ஓட்டுகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட தேசிய மாநாட்டு கட்சி, 42 இடங்களிலும், காங்கிரஸ் 6 இடங்களிலும் வென்றது. பாஜக 29 இடங்களிலும், மெகபூபா முப்தியின் பிடிபி கட்சி 3 இடத்திலும், சுயேச்சைகள் 7 இடங்களிலும், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் ஜேபிசி கட்சிகள் தலா ஒரு இடங்களிலும் வெற்றி பெற்றன. தனித்து ஆட்சியை பிடிக்க எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
இதற்கிடையே தான் 4 சுயேச்சைகள் மற்றும் ஒரு ஆம்ஆத்மி எம்எல்ஏ என மொத்தம் 5 பேர் தேசிய மாநாட்டுக்கு கட்சிக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தனர். இதன்மூலம் தேசிய மாநாட்டு கட்சிக்கு காங்கிரஸை சேர்க்காமல் எம்எல்ஏக்களின் ஆதரவு என்பது 47 ஆக அதிகரித்தது. இதையடுத்து ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. புதிய முதல்வராக ஓமர் அப்துல்லா பதவியேற்றுள்ளார். அவரது அமைச்சரவையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தான் ஓமர் அப்துல்லா தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் என்பது கடந்த 17 ம் தேதி நடந்தது. அந்த அமைச்சரவை கூட்டத்தில் ஜம்மு காஷ்மீரை மாநிலமாக்க வேண்டும் என்றும் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் ஒப்புதலுக்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. தற்போது இந்த தீர்மானம் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு மனோஜ் சின்ஹா ஒப்புதல் வழங்கி உள்ளார்.
இதையடுத்து இந்த தீர்மானம் என்பது மத்திய அரசுக்கு அனுப்பப்படும். மத்திய அரசு அனுமதி வழங்கும் பட்சத்தில் மீண்டும் ஜம்மு காஷ்மீர் மாநிலமாக மாற்றப்படலாம். இதனால் விரைவில் ஓமர் அப்துல்லா டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்களை சந்தித்து த ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க கோரிக்கை வைக்க உள்ளார்.
ஆனால் தற்போதைய சூழலில் மத்திய அரசு மீண்டும் ஜம்மு காஷ்மீரை மாநிலமாக்க ஒப்புதல் அளிக்காது என்றே கூறப்படுகிறது. இதனால் ஜம்மு காஷ்மீர் அமைச்சரவையின் தீர்மானம் மத்திய அரசால் கிடப்பில் போடப்பட வாய்ப்புள்ளது என்றும் அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications