மிகப்பெரிய பூஸ்ட்! ரூ.40,000 கோடிக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள் வாங்க மத்திய அரசு அனுமதி!
டெல்லி: பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து ஆயுதப்படையினருக்கு ரூ.40 ஆயிரம் கோடி அளவுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் வாங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவசர கால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
அவசரகால கொள்முதல் அதிகாரத்தின் கீழ் பாதுகாப்பு படையினருக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் வெடி மருந்துகள் வாங்க மத்திய அரசின் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் ஒப்புதல் அளித்து உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவசரகால அதிகாரங்களின் கீழ் கையகப்படுத்துதலுக்கான ஒப்புதலை, பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட அதன் கூட்டத்தில் பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் சமீபத்தில் வழங்கியதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ANI செய்தி வெளியிட்டுள்ளது.
ரூபாய் 40 ஆயிரம் கோடி தொகையில் கண்காணிப்பு ட்ரோன்கள், தற்கொலை ட்ரோன்கள், பீரங்கிகளுக்கு தேவையான வெடி மருந்துகள், ராக்கெட்கள், வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவை வாங்கப்பட உள்ளன. முக்கியமாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இவை வாங்கப்பட உள்ளன.
கடந்த ஐந்தாண்டுகளில், ஐந்தாவது முறையாக அவசரகால கொள்முதல் அதிகாரத்தை பயன்படுத்தி ஆயுதங்கள் வாங்கப்பட உள்ளன. பாகிஸ்தானுக்கு எதிரான மோதலின் போது பிரமோஸ், ஸ்கால்ப் க்ரூஸ் உள்ளிட்ட ஏராளமான ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதனையடுத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த முடிவை ஆயுதப்படைகளை செயல்படுத்த உள்ளன. அவர்களுக்கு பாதுகாப்புப்படை நிதி குழுவினர் அறிவுரை வழங்குவார்கள். இது தொடர்பாக பொதுத்துறை மற்றும் தனியார் துறையினருடன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.
பாகிஸ்தானில் உள்ள இலக்குகளை தாக்க பயன்படுத்தப்பட்ட ரேம்பேஜ் ஏவுகணைகள் தற்போது வாங்கப்பட உள்ளன. முன்பு இந்த ஏவுகணைகளுக்காக ஒப்பந்தம் போடப்பட்ட நிலையில், தற்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட உள்ளது. மேலும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை நேரில் கண்காணித்த ஹெரோன் மார்க் 2 டிரோன்களும் அதிகளவில் வாங்கப்பட உள்ளன.
டிரோன்களை கண்டுபிடிப்பதற்கான ரேடார்கள் தொடர்பான ஒப்பந்தத்தை பொதுத்துறை நிறுவனமான 'பெல்'க்கு (BHEL) கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உள்நாட்டில் டிரோன் தயாரிக்கும் நிறுவனங்களும் ஒப்பந்தங்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் நடந்து கொண்டிருக்கும் போதே இந்த ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் விமானப்படையின் 12 விமான தளங்களில் 11 தளங்களை தாக்கி, அவர்களின் உள்கட்டமைப்பு மிற்றும் விமானங்களுக்கு பெரும் சேதத்தை விளைவித்ததன் மூலம் பாகிஸ்தான் விமானப்படைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications