ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ஆக. 7 வரை ப.சிதம்பரத்தை கைது செய்ய தடை நீடிப்பு
டெல்லி: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்புவதற்காக, மத்திய முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம், முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து ஆகஸ்ட் 7ம் தேதிவரை அவரை கைது செய்ய தடை விதித்துள்ளது டெல்லி நீதிமன்றம்.
2006ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தார். அப்போது மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3,500 கோடி முதலீடு செய்தது.

இந்த முதலீடுக்கு, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவின் அனுமதி பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இதற்கு ப. சிதம்பரத்தின் மகன், கார்த்தி சிதம்பரத்துக்குச் சொந்தமான நிறுவனம் உதவியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. நிதி நிறுவன முறைகேட்டில், ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்துக்குத் தொடர்பிருப்பதற்கான ஆதாரங்கள் தங்கள் வசம் உள்ளன என்று சட்டவிரோத பணப்பரிவர்த்தனை ஆணையம் தெரிவித்தது.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறையும், சிபிஐயும் தீவிரமாக விசாரித்துவருகின்றன. டெல்லியில் உள்ள பாட்டியாலா சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.
இந்த வழக்கில் 2014ம் ஆண்டு சிபிஐ குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அதில் முன்னாள் தகவல் தொடர்பு துறை அமைச்சர் தயாநிதி மாறன் பெயர் குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் விடுபட்ட சில தகவல்கள், ஆதாரங்களை இணைத்து சிபிஐ கடந்த 19ம் தேதி பாட்டியாலா நீதிமன்றத்தில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதில், ப.சிதம்பரம், அவர் மகன் கார்த்தி சிதம்பரம் பெயர்களும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்கப்பட்டன.
கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனத்திற்கு தலா ரூ.26 லட்சம் மற்றும் ரூ.87 லட்சங்கள் சட்ட விரோதமாக வழங்கப்பட்டது என்று துணை குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இன்று, முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார் ப. சிதம்பரம். கைது நடவடிக்கையில் இருந்து தப்ப சிதம்பரம் மனு தாக்கல் செய்திருப்பதாக கூறப்பட்டது. மனுவை ஏற்ற நீதிபதி ஓ.பி.ஷைனி, ஆகஸ்ட் 7ம் தேதிவரை இவ்வழக்கில் சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்க தடை விதித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications