பாக். ஐஎஸ்ஐக்கு உளவு பார்த்த ராஜஸ்தான் நபர் கைது.. எல்லை குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளதால் அதிர்ச்சி
ஜம்மு காஷமீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவுத் தகவல்களை கொடுத்ததாக ராஜஸ்தானைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுளள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் ஏப்ரல் 22 ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் கொடூரமான தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பயங்கரவாத தாக்குதலில், அப்பாவி மக்கள் 26 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பின்னணியில் பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத இயக்கத்துக்கு தொடர்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அட்டாரி வாகா எல்லை மூடல், சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, இந்தியாவில் இருந்து பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், இந்தியாவுக்குள் பாகிஸ்தானியர் பயணிக்க அனுமதிப்பு மறுப்பு, தபால், பார்சல் சேவை நிறுத்தம் என பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரத்திலும் தாக்குதல் தொடுக்கும் என்பதால் பாகிஸ்தான் அரசு கடும் அச்சத்தில் உள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு தொடா்பிருப்பதாக என்ஐஏ விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால், இந்த தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அதேநேரம், பாகிஸ்தானை சீண்டினால் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஒருபுறம் மிரட்டல் விடுத்து வருகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தால் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவாகியுள்ளது. இந்தியா எந்த நேரத்திலும் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. இதற்காக போர் விமானங்கள், ராணுவப் படை, கப்பற்படை ஆகியவை தயாராகி வருகின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவுத் தகவல்களை கொடுத்ததாக ராஜஸ்தானை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மர் மாவட்டம், ஜீரோ ஆர்டி மோகன்கர் பகுதியைச் சேர்ந்தவர் பதான் கான். இவருக்கும், பாகிஸ்தானின் உளவு அமைப்புக்கும் தொடர்பிருப்பதாக போலீஸார் சந்தேகித்து கடந்த சில வாரங்களாக அவரை கண்காணித்து வந்துள்ளனர். இந்நிலையில், ராஜஸ்தான் புலனாய்வுத் துறை பதான் கானை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
பதான் கான், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அதிகாரிகளுக்கு இந்திய சிம் கார்டுகளை வாங்கி கொடுத்து உதவியுள்ளார். உளவு பார்த்ததற்காக ஐஎஸ்ஐ அமைப்பிடம் இருந்து அதிக அளவிலான பணத்தையும் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பதான் கானுக்கு பாகிஸ்தான் உளவுப் பிரிவுடன் தொடர்பில் இருந்துள்ளார். உளவு பார்ப்பது, சதிவேலைக்கான பயிற்சி பெறுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததும், இதற்காக அந்நாட்டு உளவுப் பிரிவிடம் இருந்து பணம் பெற்றுள்ளதும் தெரியவந்துள்ளது.
ஐஎஸ்ஐக்கு தொடர்ந்து உளவு பார்த்து வந்ததுடன், ஜெய்சால்மர் எல்லைப் பகுதி குறித்த முக்கிய தகவல்களையும் பாகிஸ்தான் உளவுப் பிரிவுக்கு பதான் கான் வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications