ஆபத்தை பார்த்ததும் அல்லாஹு அக்பர் என சொன்னார்.. உடந்தை கிடையாது.. ஜிப்லைன் ஆபரேட்டர் தந்தை விளக்கம்
ஸ்ரீநகர்: பஹல்காம் தாக்குதல் சமயத்தில் ஜிப் லைன் ஆப்ரேட்டர் "அல்லாஹு அக்பர்" எனச் சொன்ன வீடியோ இணையத்தில் பரவிய நிலையில், அவரிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இருப்பினும், தனது மகனுக்குத் தீவிரவாதிகள் இருப்பது குறித்துத் தெரியாது என்றும் எதாவது ஆபத்து வந்தால் இஸ்லாமியர்கள் "அல்லாஹு அக்பர்" எனச் சொல்வது நார்மல் தான் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த வாரம் மிக மோசமான தீவிரவாதத் தாக்குதல் நடந்தது. அங்குள்ள பைசரன் பள்ளத்தாக்கில் இயற்கை அழகை ரசித்து வந்த சுற்றுலாப் பயணிகள் மீது மிக மோசமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும், பலர் காயமடைந்தனர். சமீப காலங்களில் காஷ்மீரில் நடந்த மிக மோசமான தாக்குதலாக இது இருக்கிறது.

ஜிப்லைன் ஆபரேட்டர்
இந்தத் தாக்குதல் தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே நேற்றைய தினம் தாக்குதல் தொடர்பாகப் புதிய வீடியோ ஒன்று இணையத்தில் பரவியது. ரிஷி பட என்ற சுற்றுலாப் பயணி அந்த வீடியோவை எடுத்திருந்தார். அதில் மேலே பிஷி பட் ஜிப்லைனில் போகும்போது கீழே துப்பாக்கிச் சூடு நடப்பதும் அப்பாவி மக்கள் சரிவதும் பதிவாகி இருந்தது. மேலும், தன்னை ஜிப் லைனில் அனுப்பும்போது அந்த ஆப்ரேட்டர் "அல்லாஹு அக்பர்" என மூன்று முறை கூறியதாகத் தெரிவித்திருந்தார்.
சரியாக அப்போது தான் துப்பாக்கிச் சூடும் தொடங்கியதாக அந்தச் சுற்றுலாப் பயணி குறிப்பிட்டிருந்தார். இது கடந்த இரு நாட்களாக இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள் அந்த ஜிப்லைன் ஆப்ரேட்டரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நேற்று வீடியோ வெளியான நிலையில், நேற்று மாலையே ஜிப்லைன் ஆப்ரேட்டர் முஸம்மில் என்பவரை என்ஐஏ விசாரணைக்கு அழைத்துச் சென்றுவிட்டது.
என்ஐஏ விசாரணை
அதேநேரம் தீவிரவாதத் தாக்குதலுக்கும் ஜிப்லைன் ஆப்ரேட்டருக்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா என்பதை இப்போதே உடனடியாகச் சொல்ல முடியாது என என்ஐஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் விசாரணையின்போது, தனக்கு அங்குத் தீவிரவாதிகள் இருப்பது எதுவும் தெரியாது என்றே ஜிப்லைன் ஆப்ரேட்டர் முஸம்மில் கூறியதாக என்ஐஏ வட்டாரங்கள் கூறுகின்றன.
தந்தை விளக்கம்
இதற்கிடையில், ஜிப்லைன் ஆபரேட்டரின் தந்தை அப்துல் அஜீஸ், தனது மகன் எந்தவொரு தவறும் செய்யவில்லை என்றும் "அல்லாஹு அக்பர்" என்பது தீவிரவாதிகளுக்கான முழக்கம் இல்லை என்றும் கூறினார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நான் அந்த வீடியோவைப் பார்க்கவில்லை... ஆனால், நாங்கள் முஸ்லிம்கள், புயல் வந்தாலும் கூட 'அல்லாஹு அக்பர்' என்று கூறுவோம். சுற்றுலாப் பயணிகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அவன் "அல்லாஹு அக்பர்" எனக் கூறியிருப்பான். அவன் நிஜமாகவே வேலை செய்து நேர்மையாகப் பணம் சம்பாதிக்கவே அங்கு வேலை பார்த்தான்" என்றார்.
தேசிய மாநாட்டுக் கட்சி
இதற்கிடையில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் இம்ரான் நபி தாரும் ஜிப்லைன் ஆபரேட்டருக்கு ஆதரவான கருத்துகளையே கூறியிருக்கிறார். திடீரென இதுபோன்ற பேரழிவு நடக்கும்போது இறைவனை நினைப்பது இயல்பானது தான் என்று அவர் கூறினார். அவர் மேலும் கூறுகையில், "அந்த ஆப்ரேட்டர் ஒரு முஸ்லீம்.. இதனால் தாக்குதல் உட்பட மோசமான சம்பவம் நடக்கும்போது அவர் அல்லாஹ்வை நினைவு கூர்ந்துள்ளார்... அது இயற்கையான செயல்முறை. புலனாய்வு அமைப்புகள் அப்பாவிகளைக் குறிவைக்கக் கூடாது" என்றார்.












Click it and Unblock the Notifications