ராணுவ ரகசியங்களை பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு கொடுத்ததாக பிஎஸ்எப் தலைமை காவலர் கைது
டெல்லி: ராணுவம் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்குக் கொடுத்ததாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரஜோரி மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் அப்துல் ரஷீத். இவர் இந்திய ராணுவம் தொடர்பான ரகசிய ஆவணங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐக்கு ஒரு ஏஜெண்ட் மூலமாக கொடுத்ததாகவும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய ஐஎஸ்ஐ ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல, இவர்களுடன் தொடர்பில் இருந்த மற்றவர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக புலானாய்வுத் துறை இணைச் செயலாளர் ரவீந்திர ஜாதவ் தெரிவத்துள்ளார்.
மேலும், இதுதொடர்பாக, டெல்லி மற்றும் ஜம்மு- காஷ்மீரின் 6 பகுதிகளில் போலீசார் தீவிர விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மத்தியப் புலானாய்வுத் துறையின் இணை ஆணையர் கே.பி.எஸ்.மல்ஹோத்ரா தலைமையிலான குழு இந்த சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று மதியம் கொல்கத்தாவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த 3 பேரை அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐ ஏஜெண்டுக்கும் இவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர் எனவே அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications