"எதற்கும் தயார்! நம்பிக்கையில்லாத் தீர்மானம் மட்டும் வேண்டாமே.." ரகசிய டீல் பேசும் இம்ரான் கான்!
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இக்கட்டான அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், அங்குள்ள அரசியல் சூழல் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. அப்போது கடந்த 2019இல் புதிய பாகிஸ்தான் படைப்போம் என்ற முழக்கத்தை வைத்து ஆட்சியைப் பிடித்தவர் இம்ரான் கான்.
இம்ரான் கானின் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும், அவருக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் இம்ரான் கான் ஆட்சியை அமைத்தார்.

இம்ரான் கான்
இருப்பினும், இம்ரான் கானால் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முடியவில்லை. இதனால் கூட்டணிக் கட்சிகளுக்கு இம்ரான் கான் மீதான அதிருப்தி அதிகரித்தன. பொதுமக்களும் இம்ரான் கான் மீதான நம்பிக்கையை இழந்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இம்ரான் கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தைக் கொண்டு வந்தன. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியிலேயே பலரும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் ஆட்சியை இழக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

நம்பிக்கை இல்லாத் தீர்மானம்
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, கூட்டணியில் இருந்து பலரும் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பி உள்ளனர். சுமார் 50க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் எம்பிகளும் மாயமாகி உள்ளதாகவும் தகவல் வெளியானது. நம்பிக்கை இல்லாதத் தீர்மானத்தை வாபஸ் பெற வைக்க இம்ரான் கான் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறார். நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விரைவில் வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ஆளும் தரப்பில் இருந்து எதிர்க்கட்சி தலைவர்கள் உடன் ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரகசிய பேச்சுவார்த்தை
பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலுவடைந்து வரும் நிலையில், தனது அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாபஸ் பெற்றால் நாடாளுமன்றத்தைக் கலைக்க இம்ரான் கான் தயாராக உள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்களிடம் ஆளும் தரப்பு கூறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ரகசிய பேச்சுவார்த்தையில் இம்ரான் கான் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட, அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்த ஒருவர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

பாக். நிலை
அங்கு இப்போது மிக மோசமான ஒரு அரசியல் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதில் இருந்து வெளியே இம்ரான் கான் இப்போது பாதுகாப்பான பாதையை முன்மொழிந்துள்ளார். அதேநேரம் இந்த முன்மொழிவை எதிர்க்கட்சி தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எத்தகைய சூழலையும் எதிர்கொள்ள இம்ரான் கான் தயாராக உள்ளதாக அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், இந்த முன்மொழிவை எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே கூறப்படுகிறது.

உறுதி
இம்ரான் கானை நம்ப வேண்டாம் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்ததாகவும், நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேறத் தேவையான வாக்குகள் இருப்பதால் விரைவில் வாக்கெடுப்பை நடத்துமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தவும் எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள், "இந்த தீர்மானம் நிறைவடையத் தேவையான வாக்குகள் எங்களிடம் உள்ளன. இந்தச் சூழலில், நாங்கள் தீர்மானத்தை வாபஸ் பெற்றால், அடுத்து என்ன நடக்கும் என எங்களுக்கு உறுதியாகத் தெரியாது" என்றார்.

அடுத்து என்ன
அதேநேரம் இம்ரான் கான் தரப்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாபஸ் பெறப்பட்டால், வரும் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்படும் என உறுதி அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருந்த போதிலும், பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இம்ரான் கானை நம்ப மறுப்பதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் வாபஸ் பெறப்படாது என்றே தெரிகிறது. அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்சத்தில், அவர் ஆட்சியை இழக்கக்கூடும் என்றே பாக். ஊடகங்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications