மத்திய பிரதேச தேர்தல்.. பழங்குடியின வாக்குகளை குறிவைக்கும் பாஜக - காங்.. யாருக்கு கை மேல் பலன்?
போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின வாக்கு வங்கியை பெறுவதில் பாஜக - காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக விளங்கி வந்த குக்ஷி தொகுதியில் இந்த தேர்தலில் அக்கட்சி கடும் போட்டியை எதிர்கொள்ளும் எனத் தெரிகிறது.
ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் வரும் 17 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது .முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் பதவி வகித்து வருகிறார். மத்திய பிரதேசத்தில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் வென்றது. எனினும், பாஜக செய்த ஆபரேசன் தாமரை காரணமாக மத்திய பிரதேசத்தில் 2 ஆண்டுகளில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த ஜோதிர் ஆதித்யா சிந்தியா, முதல்வர் பதவி கிடைக்காததால் அதிருப்தி அடைந்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு தாவினார். அதன் தொடர்ச்சியாக பாஜக அங்கு மீண்டும் ஆட்சிக்கு வந்தது. மத்திய பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் பாஜக 128 எம்.எல்.ஏக்களுடன் ஆட்சி நடத்தி வருகிறது. முதல்வராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார்.
குக்ஷி தொகுதி: இந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விட வேண்டும் என காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது. அதேபோல், ஆட்சியை இழந்து விடக்கூடாது என்பதில் பாஜகவும் கவனமாக உள்ளது. இதனால், மத்திய பிரதேசத்தில் தேர்தல் பரபரப்பு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே, அங்குள்ள பழங்குடியின மக்களின் வாக்குகளை பெற பாஜகவும் காங்கிரஸ் கட்சியும் வியூகம் வகுத்து வருகின்றன.
பிரதமர் மோடி முதல் பிரியங்கா காந்தி வரை இரு கட்சிகளையும் சேர்ந்த தேசிய தலைவர்களும் முகாமிட்டுள்ளனர். பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் குக்ஷி தொகுதியை பொறுத்தவரை காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே இருந்து வந்தது. இதுவரை நடைபெற்ற 15 தேர்தல்களில் காங்கிரஸ் 12 முறை வென்றுள்ளது. ஜனசங்கம் 3 முறை வென்றுள்ளது.
அனல் பறக்கும் பிரசாரம்: காங்கிரஸ் கட்சிக்கு இங்கு நல்ல செல்வாக்கு இருந்தாலும் இந்த முறை அக்கட்சிக்கு கொஞ்சம் அக்னி பரிட்சையாகவே இருக்கும் எனத் தெரிகிறது. ஏனெனில், லட்லி பெஹென் யோஜனா என்ற பழங்குடியின மக்களுக்கு பலன் அளிக்கும் திட்டத்தை பாஜக அறிவித்த பிறகு அங்கு நிலமை மாறியிருக்கிறது. தார் மாவட்டத்தில் உள்ள குக்ஷி தொகுதியில் 1.24 லட்சம் பெண் வாக்காளர்கள் உள்ளனர்.
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 46 ஆயிரம். இதில் 52 ஆயிரம் பழங்குடியின பெண்கள் பலன் அடைய உள்ளனர். ஆகவே இந்த முறை இந்த வாக்குகள்தான் தொகுதியில் யாருக்கு வெற்றி என்பதை தீர்மானிப்பதாக உள்ளது. இதனால்தான், அனல் பறக்கும் பிரசாரத்தில் பாஜக - காங்கிரஸ் ஈடுபட்டுள்ளன. மக்களின் தீர்ப்பு என்ன என்பது வரும் டிசம்பர் 2 ஆம் தேதி தெரிந்துவிடும்.












Click it and Unblock the Notifications