பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மத்திய பாஜக அரசு நிச்சயம் மீட்கும்: மத்திய அமைச்சர் ஜிகே ரெட்டி
ஶ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள ஜம்மு காஷ்மீர் பகுதிகளை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு மீட்டே தீரும்; ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு இந்து ஒருவரை முதல்வராக்குவோம் என்று மத்திய அமைச்சரும் பாஜகவின் ஜம்மு காஷ்மீர் பொறுப்பாளருமான ஜிகே ரெட்டி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். காங்கிரஸும் இதர கட்சிகளும் 70 ஆண்டுகளாக இந்து ஒருவரை ஜம்மு காஷ்மீர் முதல்வராக்கவில்லை எனவும் மத்திய அமைச்சர் ஜிகே ரெட்டி குற்றம்சாட்டினார்.
ஜம்மு காஷ்மீர் தேர்தலை முன்வைத்து ஊடகம் ஒன்றுக்கு மத்திய அமைச்சர் ஜிகே ரெட்டி அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: முந்தைய காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சிகளால்தான் பெரும்பகுதி ஜம்மு காஷ்மீர் நிலம், பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமித்து காஷ்மீர் பகுதிகள், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள்தான். இது தொடர்பாக 1994-ம் ஆண்டே நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அன்று காங்கிரஸ் தவறு செய்யாமல் இருந்திருந்தால் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர் பகுதிகள் இந்தியாவிடம் இருந்திருக்கும். பாகிஸ்தான் வசமிருக்கும் காஷ்மீர் பகுதிகளை மத்திய அரசு மீட்கும். ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளுக்கு 24 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஜம்மு காஷ்மீரில் பாஜக தனித்தே ஆட்சியை அமைக்கும், ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச மக்கள், பாஜகவுக்கு நல்ல தீர்ப்பை தருவார்கள் என நம்புகிறோம். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர் அமைதி திரும்பி இருக்கிறது என்பது வெளிப்படையான ஒன்று. ஜம்மு காஷ்மீரில் இப்போது பயங்கரவாத தாக்குதல்கள், குண்டு வெடிப்பு சம்பவங்கள், கல்வீச்சு நிகழ்வுகள் எதுவும் இடம் பெறவில்லை. இதற்கு காரணமே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் நடவடிக்கைகள்தான்.
370-வது பிரிவு நீக்கப்பட்ட பின்னர் இந்தி மொழி திரைப்படங்கள் கூட காஷ்மீரில் திரையிடப்படுகின்றன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல்வேறு மொழி அனிமேஷன் படங்கள் வெளியிடப்படுகின்றன. ஜம்மு காஷ்மீருக்கு கடந்த ஆண்டு மட்டும் 2 கோடி சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.
ஶ்ரீநகரில் லால் சவுக்கில்தான் முன்னர் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டது. ஶ்ரீநகரில் இந்திய தேசியக் கொடிக்கு அவமரியாதை செய்யப்பட்டது. ஆனால் இப்போது லால் சவுக்கில் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கைகளால் உலக அரங்கில் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவைத் தவிர எந்த ஒரு நாடும் பாகிஸ்தானை ஆதரிக்கவும் இல்லை.
கடந்த 70 ஆண்டுகளில் ஜம்முவில் இருந்து ஒரு இந்துவை கூட காங்கிரஸ் ஏன் முதல்வராக நியமிக்கவில்லை? ஆனால் மதச்சார்பின்மை பற்றி காங்கிரஸ்தான் பேசுகிறது. ஜம்மு காஷ்மீருக்கு இந்து ஒருவர் முதல்வராகக் கூடாதா? லெபனானில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவருக்காக ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகள் அஞ்சலி செலுத்துகின்றன. ஆனால் வங்கதேசத்தில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து ஏன் மவுனமாக இருக்கின்றன?
ஜம்மு காஷ்மீரில் 1947-ம் ஆண்டு முதல் நடைபெற்ற பயங்கரவாத படுகொலைகள் தொடர்பாக பாஜக அரசு வெள்ளை அறிக்கை வெளியிடும். அதில் பாரதிய ஜன சங்கத்தின் தலைவர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் மர்ம மரணமும் இடம் பெறும். இதனை பாஜகவின் தேர்தல் அறிக்கையிலேயே வாக்குறுதியாக கொடுத்துள்ளோம். இவ்வாறு மத்திய அமைச்சர் ஜிகே ரெட்டி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications