பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தான் தூக்கத்தை கெடுத்துவிட்டது.. போரை நிறுத்துமாறு கெஞ்சினார்கள்! பிரதமர் மோடி
டெல்லி: இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை பாகிஸ்தான் தூக்கத்தைக் கெடுத்ததாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கான்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர் பாகிஸ்தானுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்தார். இனியும் அணு ஆயுத பூச்சாண்டிகளுக்கு இந்தியா அஞ்சாது எனத் தெரிவித்த அவர், இனி தீவிரவாதிகளும் அதை ஆதரிக்கும் அரசுகளும் ஒரே மாதிரி தான் நடத்தப்படும் என்றார்.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள கான்பூரில் சுமார் ரூ.50,000 கோடி மதிப்புள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அங்குப் பேசிய பிரதமர் மோடி இந்திய ராணுவத்தைப் பாராட்டிப் பேசினார். பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத மறைவிடங்களை அந்த நாட்டிற்குள்ளேயே பல நூறு கிமீ சென்று அழித்தோம் என்றார்.

பிரதமர் மோடி
தொடர்ந்து பேசிய அவர், "நமது பாதுகாப்புப் படை அதீத வீரத்தோடு செயல்பட்டது. இது பாகிஸ்தான் ராணுவத்தைப் போரை நிறுத்துமாறு கெஞ்ச வேண்டிய நிலைக்குத் தள்ளியது. ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் ராணுவ வலிமையை" உலகிற்கு எடுத்துக் காட்டுவதாக இருந்தது. குறிப்பாக பிரம்மோஸ் ஏவுகணையின் திறனை உலகமே பார்த்தது. பாகிஸ்தான் ராணுவத்தின் தூக்கத்தை பிரம்மோஸ் கெடுத்துவிட்டது.
நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இங்கு யாரும் எந்த மாயையிலும் இருக்க வேண்டாம். ஆபரேஷன் சிந்தூர் போது தாக்குதல் வேண்டாம் என கெஞ்சியதை மறந்துவிடக் கூடாது. ஆபரேஷன் சிந்தூர் நிறுத்தப்பட்டுள்ளதே தவிர இன்னும் முடியவில்லை.
அணு ஆயுத பூச்சாண்டிகளுக்குப் பயப்பட மாட்டோம்
இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கு வலிமையான பதிலடி கொடுக்கும் என்பதை உலகிற்குக் காட்டியுள்ளோம். எங்கு எப்போது தாக்க வேண்டும் என்பதை முடிவு செய்து துல்லியமாகத் தாக்கும் திறன் இந்தியாவுக்கு இருக்கிறது. இனியும் அணு ஆயுத பூச்சாண்டிக்கு எல்லாம் இந்தியா அச்சுறுத்தப்படாது. தீவிரவாதிகளும் சரி, அவர்களை ஆதரிக்கும் அரசுகளும் சரி இனி ஒரே மாதிரி தான் நடத்தப்படுவார்கள்.
அழிக்கப்படுவார்கள்
இனியும் அரசுக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை எனப் பாகிஸ்தான் சொல்வதை ஏற்க முடியாது. கான்பூர் பாஷையில் சொல்ல வேண்டும் என்றால் எதிரிகள் எங்கு இருக்கிறார்களோ.. அங்கே சென்றே அவர்கள் அழிக்கப்படுவார்கள்.
இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பாதுகாப்புத் துறையை எந்தளவுக்கு வலிமையாக மாற்றியுள்ளது என்பதையும் உலகம் இப்போது உணர்ந்திருக்கிறோம். மேக் இன் இந்தியாவின் சக்தியையும், நமது நாட்டு ஆயுதங்களையும் உலகம் இந்த ஆபரேஷன் சிந்தூரில் பார்த்தது. நமது பிரம்மோஸ் ஏவுகணை எதிரி நாட்டில் நுழைந்து பல இலக்குகளைத் துல்லியமாக அழித்தது.
தூக்கத்தை கெடுத்த பிரம்மோஸ்
ஒரு காலத்தில், பாரம்பரிய தொழில்கள் கூட உத்தர பிரதேசத்தில் இருந்து வெளியேறின. ஆனால், இப்போது பாதுகாப்புத் துறையில் மிகப் பெரிய நிறுவனங்கள் கூட இங்கு வருகின்றன. அமேதிக்கு அருகில் ஏற்கனவே AK-203 துப்பாக்கி உற்பத்தி தொடங்கிவிட்டது. ஆபரேஷன் சிந்தூர் போது எதிரிகளின் தூக்கத்தைக் கெடுத்த பிரம்மோஸ் ஏவுகணை தான் உத்தரப் பிரதேசத்தின் புதிய முகவரியாக இருக்கிறது" என்றார்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாகவே இந்தியா ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. இதில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்தியா குறிவைத்து அழித்தது. இதில் 100+ தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்தியாவின் வெற்றியைப் பொறுக்காத பாகிஸ்தான் மீண்டும் தாக்குதலை நடத்தியது. அதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்த நிலையில், அதைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் திணறிப் போய் மோதலை முடித்துக் கொள்ளத் தூதுவிட்டது.












Click it and Unblock the Notifications