ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆன குஜராத் விவசாயி.. மொத்தமாக திருடிய நண்பனை மோப்ப நாய் எப்படி கண்டுபிடித்தது?
அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே விவசாயி வீட்டில் ரூ.1 கோடி கொள்ளை போனது. இந்த பணத்தை யார் திருடியது என்று தெரியவில்லை. இதுபற்றி பணத்தை பறிகொடுத்தவர் போலீசுக்கு புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் நேரில் வந்து விசாரித்தனர். அப்போது பணத்தை எடுத்த கொள்ளையனை கண்டுபிடிக்க மோப்ப நாயை போலீசார் வரவழைத்தனர். அந்த போலீஸ் நாய் மோப்பசக்தியால் கண்டுபிடித்தது. எப்படி என்பதை பார்ப்போம்.
குஜராத் மாநிலம் அமதாபாத் மாவட்டத்தில் சரக்வாலா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் வசித்து வந்த விவசாயிக்கு மிகப்பெரிய அதிர்ஷ்டம் அடித்தது. எப்படி என்றால், அந்த குறிப்பிட்ட விவசாயிக்கு கிராமத்தை ஒட்டி விவசாய இடம் இருந்தது. அருகிலேயே தொல்லியல் துறை அமைந்துள்ளது. இதனால் அவரது இடத்தை, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கேட்டுள்ளனர். அவரும் அந்த இடத்தை கொடுத்தார். இதன் மூலம் அந்த விவசாயி ஒரே நாளில் கோடீசுவரர் ஆனார். நிலம் விற்ற பணம் ரூ.1 கோடியே 7 லட்சத்தை வீட்டில் வைத்திருந்தார்.

அதை எப்படியோ கண்டுபிடித்த கொள்ளையர்கள் மொத்த பணத்தையும் திருடி செல்ல திட்டம் தீட்டி வந்தனர். இந்நிலையில் கடந்த 12-ந்தேதி கோடீஸ்வர விவசாயி வெளியூர் சென்றார். நவராத்திரி நேரத்தில் வீட்டில் புகுந்த கொள்ளையர்கள் விவசாயி வீட்டில் இருந்த மொத்த பணத்தையும் கொள்ளையடித்தார்கள்.
இதனிடையே வீட்டை விட்டு வெளியே சென்ற விவசாயி, வீடு திரும்பியுள்ளார். அங்கு வைத்திருந்த பணம் மாயமானதால் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தனது வீட்டில் நடந்த திருட்டு குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். 30 சந்தேக நபர்களையும், 14 திருட்டு குற்றவாளிகளையும் போலீசார் அங்கு தீவிர விசாரணை நடத்தினர். அவர்களை வரிசையாக நிற்க வைத்து போலீஸ் மோப்ப நாய் பென்னியை விட்டு மோப்பம் பிடிக்கச் செய்தனர். அப்போது புத்தா சோளங்கி என்பவரின் அருகே நாய் சிறிது நேரம் அப்படியே நின்றது.
கொள்ளை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்தபோதும் புத்தாவின் வீடு அருகே சென்று மோப்ப நாய் நின்றது. இதனால் போலீசார் புத்தாவின் வீட்டை சோதனையிட்டபோது, அங்கு திருட்டு போன பணம் ரூ.53.9 லட்சம் இருந்தது. அந்த பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், விக்ரம் சோளங்கி என்பருடன் சேர்ந்து இந்த திருட்டில் ஈடுபட்டதும், மீதி தொகை அவரிடம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதையடுத்து விக்ரம் சோளங்கியின் வீட்டில் இருந்து திருட்டுப்போன மீதி பணத்தை போலீசார் மீட்டனர்,
புத்தா சோளங்கி, விவசாயியிடம் நெருங்கி பழகியவர் என்றும், நிலம் விற்பனை செய்து, வீட்டில் பணம் வைத்து இருப்பது அவருக்கு தெரிந்துள்ளது, ஊருக்கு செல்லும்போது விவசாயி புத்தாவிடம் பேசிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்.. இதையடுத்து புத்தா சோளங்கி விக்ரமுடன் திட்டம் தீட்டி பணத்தை கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
எப்படி பழக்கம்: அண்மையில் அந்த கோடீஸ்வர விவசாயி, தன்னுடைய மற்றொரு நிலத்தை விற்பனை செய்ததில் கார் ஒன்றை வாங்கினார். அப்போது அவருக்கு கார் ஓட்டத் தெரியாது. புத்தா சோளங்கிதான் காரில் விவசாயியை அழைத்து வந்துள்ளார். நல்லவர்போல நம்பிக்கையாக பழகிய புத்தா , சமயம் பார்த்து காத்திருந்து அவரிடம் இருந்த மொத்த பணத்தையும் திருடி உள்ளார். போலீஸ் மோப்ப நாய் பென்னி இந்த திருட்டு சம்பவத்தில் உண்மை கண்டறிய மிகப்பெரிய அளவில் உதவி உள்ளது.போலீசாரும் திருடனை தங்களுடைய சாதுர்யமான முயற்சியால் கண்டுபிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications