"பீகாரில் பாஜக கூட்டணிக்கு படுதோல்வி! நிதிஷ் கட்சிக்கு 25 தொகுதிகள் தான்!" சொல்வது பிரசாந்த் கிஷோர்
பாட்னா: பீகாரில் இன்னும் சில வாரங்களில் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு என்டிஏ கூட்டணி நிச்சயம் தோல்வி அடையும் என முன்னாள் தேர்தல் வியூக வகுப்பாளரும் ஜன் சூராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் அறிவித்துள்ளார். குறிப்பாக அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஜேடியு கட்சிக்கு வெறும் 25 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
பீகார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. அங்கு ஆர்ஜேடி- காங்கிரஸ் கூட்டணி அவர்களுக்கு எதிராகக் களமிறங்குகிறது. பீகாரில் எப்போதும் இந்த இரு கூட்டணிக்கும் இடையே தான் போட்டி இருந்துள்ளது. இப்போது அங்குப் புதிதாக பிரசாந்த் கிஷோரின் ஜன் சூராஜ் கட்சியும் போட்டியிடுகிறது.

மும்முனை போட்டி
இதனால் இந்த முறை அங்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு சில வாரங்கள் மட்டுமே இருக்கும் சூழலில் எல்லா கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. பொதுமக்களைக் கவரும் வகையில் பல்வேறு வாக்குறுதிகளையும் அளித்து வருகிறார்கள். இதற்கிடையே பீகாரில் ஆளும் தேசிய என்டிஏ கூட்டணி நிச்சயம் தோல்வியடையும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார்.
குறிப்பாக நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 25 இடங்களைக் கூடப் பெறுவது கடினம் என அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், "என்டிஏ அரசு தோல்வியின் பாதையில் உள்ளது. நிச்சயமாகச் சொல்கிறேன் நிதீஷ் குமார் மீண்டும் முதல்வராக வர மாட்டார். அவரது கட்சி 25 இடங்களில் வென்றாலே அது பெரிய விஷயம்.
தோல்வி உறுதி
ஐக்கிய ஜனதா தளம் இப்போது என்ன நிலையில் இருக்கிறது.. தேர்தலில் அவர்களுக்கு என்ன முடிவு கிடைக்கும் என்பதை அறிய நீங்கள் ஒரு தேர்தல் நிபுணராக இருக்க வேண்டியதில்லை. கடந்த சட்டசபைத் தேர்தலில், சிராக் பாஸ்வான் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக நாடகம் போட்டார். நிதிஷ் குமாரின் கட்சி வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்தினார். அதில் பல தொகுதிகளில் சிராக் பாஸ்வான் கட்சி வேட்பாளர்கள் பலவீனமானவர்கள் தான். ஆனாலும் அதையே நிதிஷ் குமாரால் சமாளிக்க முடியவில்லை. இதனால் அந்த தேர்தலில் நிதிஷ் கட்சியால் 43 இடங்களில் மட்டுமே வெல்ல முடிந்தது" என்றார்.
எதிர்க்கட்சிகள்
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் குறித்துப் பேசிய அவர், "இந்தியா கூட்டணியிலும் நிலைமை சிறப்பாக இல்லை. ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கும் காங்கிரஸுக்கும் இடையே சண்டை முடியாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. அந்த கட்சியிலேயே பல அதிருப்தி தலைவர்கள் இருக்கிறார்கள்" என்றார்.
பிரசாந்த் கிஷோர்
இந்த தேர்தலில் பிரசாந்த் கிஷோர் எந்த தொகுதியிலும் போட்டியிடப் போவதில்லையாம்.. கட்சி பணிகளில் கவனம் செலுத்தும் விதமாகத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் அவர் அறிவித்தார். முன்பு அவர் கார்கஹர் அல்லது ராகோபூரில் தொகுதிகளில் போட்டியிடலாம் என சொல்லப்பட்டது. இருப்பினும், தேர்தலில் களமிறங்கினால் ஒரே தொகுதியில் கவனம் செலுத்த வேண்டி இருக்கும் என்பதாலேயே அவர் போட்டியிடவில்லை என தெரிகிறது.
பீகாரில் மொத்தம் 243 இடங்கள் உள்ளன. அங்கு வரும் நவம்பர் 6 மற்றும் 11 என இரு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் வரும் நவம்பர் 14ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications