நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு- ஜனாதிபதி உரையில் அறிவிப்பு
டெல்லி: நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தனது உரையில் தெரிவித்தார்.
பாஜக கூட்டணி அரசின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. புதிதாக பதவியேற்ற எம்.பிக்கள் பதவியேற்றதும், புதிய சபாநாயகராக சுமித்ரா மகாஜன் பதவி ஏற்றுள்ளார்.
இந்நிலையில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இணைந்த கூட்டுக் கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று உரை நிகழ்த்தினார். காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்துக்கு உரையாற்ற வந்த பிரணாப் முகர்ஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

விலைவாசி குறைப்பு
ஜனாதிபதி தனது உரையில் கூறியதாவது: வெற்றிகரமாக நாடாளுமன்ற தேர்தலை நடத்தியதற்காக தேர்தல் ஆணையத்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். நிலையான ஆட்சிக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும் வாக்களித்த மக்களின் அறிவாற்றலை பாராட்டுகிறேன்.
உணவு பொருள் விலைவாசியை குறைப்பது அரசின் முதல் குறிக்கோளாக இருக்கும். வறுமையை ஒழிப்பது அரசின் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாகும். இளைஞர்கள் நலனுக்காக அனைத்து மாநிலங்களிலும் ஐஐஎம் மற்றும் ஐஐடிக்கள் திறக்கப்படும்.

காஷ்மீர் பண்டிட்களுக்கு மறுவாழ்வு
பெண்களுக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க அரசு நடவடிக்கை எடுக்கும். பெண்கள் பாதுகாப்பில் அரசு ஒருபோதும் சமரசம் செய்துகொள்ளாது.
வடகிழக்கு மாநிலங்களில் சட்டவிரோத ஊடுருவலை தடுக்க வேலி அமைக்கப்பட்டது. அது முழுமையாக போடப்படும். காஷ்மீர் மாநிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட இந்து பண்டிட்டுகள் மீண்டும் தங்கள் தாய் மாநிலத்துக்கு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும். உரிய கவுரவத்துடன் அவர்கள் வாழ வைக்கப்படுவார்கள். கங்கை நதி சுத்திகரிப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் தரப்படும்.

இலவச வை-பை இணையதள வசதி
அரசு அலுவலகங்கள் ஊழலற்றதாக மாற்றப்படும். கறுப்பு பணத்தை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக பிற நாடுகளின் ஒத்துழைப்பு கோரப்படும். நாட்டின் முக்கிய பகுதிகளில் இலவச வை-பை இணையதள வசதி அளிக்கப்பட்டு தொலைதொடர்பு வசதி மேம்படுத்தப்படும்.
மத்திய அரசு அலுவலகங்கள் முதல் பஞ்சாயத்து அலுவலகங்கள் வரை மின்னணு நிர்வாகம் செயல்படுத்தப்படும். அனைத்து வகை சிறுபான்மையினரையும் நாட்டின் வளர்ச்சிக்கான பங்காளிகளாக அரசு சேர்த்துக்கொள்ளும். யாரையும் புறந்தள்ளிவிட்டு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல அரசு விரும்பாது.

சார்க் நாடுகளுடன் நல்லுறவு
சார்க் நாடுகளின் தலைவர்களுடன் கூடுதல் ஒத்துழைப்பு பேணப்படும். அழைப்புவிடுத்த குறுகிய காலத்தில் அமைச்சரவை பதவியேற்பு விழாவுக்கு வந்த சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
அண்டை நாடுகளுடன் நல்லுறவை தொடர விரும்பும் அதே நேரத்தில், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை சகித்துக்கொள்ள முடியாது. நாட்டின் பாதுகாப்பில் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை. கடல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

வைர நாற்கர விரைவு ரயில் திட்டம்
வேலைவாய்ப்பு மற்றும் சொத்துக்களை உருவாக்கும் வகையிலான அன்னிய நேரடி முதலீடுகள் அனுமதிக்கப்படும். பாதுகாப்பு துறையிலும் அன்னிய நேரடி முதவீடுக்கு அனுமதியளிக்கப்படும். நாடு சுதந்திரமடைந்த 75வது ஆண்டில் இருக்கிறோம். இப்போதும் மக்கள் வீடுகள் இன்றி குடிசைகளில் வசிப்பது கவலையளிக்கிறது.
எனவே வீடற்ற அனைத்து மக்களுக்கும், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் வீடுகள் வழங்கப்படும். கடந்த பாஜக தலைமையிான கூட்டணி ஆட்சி காலத்தின்போது, தங்க நாற்கர சாலை திட்டம் செயல்படுத்தப்பட்டு அனைத்து முக்கிய நகரங்களும் விரிவடைந்த சாலைகளால் இணைக்கப்பட்டன. அதுபோல, தற்போது வைர நாற்கர விரைவு ரயில் திட்டம் கொண்டுவரப்படும். ரயில்வே துறையில் கூடுதல் முதலீடு செய்யப்படும்.
இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.

தலைவர்கள் பங்கேற்பு
ஆங்கிலத்திலான உரையை மொத்தம் 55 நிமிடங்களில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாசித்து முடித்தார். கூட்டுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திரமோடி, அமைச்சர்கள், பாஜக மூத்த தலைவர் அத்வானி, முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜனாதிபதி உரையின் மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாளையும், நாளை மறுநாளும், இரு அவைகளிலும் விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு பிறகு மக்களவையில் பிரதமர் நரேந்திரமோடியும், மாநிலங்களவையில் பாஜக குழு தலைவர் அருண்ஜேட்லியும் பதில் அளிப்பார்கள். அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் இரு அவைகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்படும்.












Click it and Unblock the Notifications