அருணாசல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி- மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
டெல்லி: அருணாசல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு மாநிலமான அருணாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. அங்கு முதல்வர் நபம் துகிக்கு எதிராக துணை சபாநாயகர் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி தூக்கினர்.
அவர்கள் 11 உறுப்பினர்களை கொண்ட பாரதிய ஜனதாவுடன் கை கோர்த்தனர். அங்கு ஏற்கனவே அறிவித்ததற்கு மாறாக, ஒரு மாதம் முன்கூட்டியே ஆளுநர் ராஜ்கோவா சட்டசபையை கூட்டினார். துணை சபாநாயகர் தலைமையில் கடந்த மாதம் 16-ந் தேதி நடந்த கூட்டத்தில், சபாநாயகரை நீக்கி தீர்மானம் நிறைவேற்றினர்.

இதையடுத்து ஆளுநர் மற்றும் துணை சபாநாயகரின் நடவடிக்கைகளுக்கு எதிராக குவஹாத்தி உயர்நீதிமன்றத்திலும் உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதனால் அங்கு ஒரு மாதமாக அரசியல் நெருக்கடி நிலவி வந்தது..
இந்த நிலையில் ஆளுநரின் பரிந்துரைப்படி அருணாசலப் பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கடந்த 24-ந் தேதி பரிந்துரை செய்தது. இதற்கு எதிராக 25-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் வழக்கு தொடுத்தது.
இதனிடையே அருணாச்சல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கும் வந்தது. இந்த நிலையில் மத்திய அமைச்சரவையின் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி தொடுத்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜெகதீஷ் சிங் கேஹர் தலைமையில் 5 நீதிபதிகளைக்கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் நடவடிக்கைக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருக்கிற போது, எதற்காக மத்திய அரசு இப்படி அவசர அவசரமாக ஒரு முடிவு எடுத்தது? அங்கு ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்துவது தொடர்பாக நீங்கள் முன்கூட்டியே எங்களுக்கு தெரிவித்திருக்க வேண்டும் என்றனர்.
அத்துடன் எந்த அடிப்படையில் அருணாசல பிரதேச மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது என்பதை பரிந்துரை செய்த தேதியுடன், 15 நிமிடங்களில் அறிக்கையாக அளிக்குமாறு ஆளுநர் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்பால் ஜெயினுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஆனால் அவர் அவகாசம் கேட்டார்.
பின்னர் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோத்தகி, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தி வெளியிட்ட அறிவிக்கையை எதிர்த்து புதிய வழக்கு தொடரப்படவில்லை என கூறி எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார்.
அவரிடம் நீதிபதிகள், இப்படிப்பட்ட காரணங்களை கூறாதீர்கள் என கண்டிப்புடன் கூறினர். பின்னர் அருணாசல பிரதேசத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடிவு எடுக்கிற அளவுக்கு என்ன நெருக்கடி ஏற்பட்டது?" என்பது குறித்து 29-ந் தேதிக்குள் மத்திய அரசு விரிவான பதில் அளிக்க நோட்டீசு அனுப்புமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications