பீகாரில் எஸ்.சி.க்கு எதிரான குற்றங்கள் அதிகம்... பெண்குழந்தைகளின் தொடக்க கல்வி நிலையும் 'வெரி லோ'
பீகார்: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் பீகாரில் தாழ்த்தப்பட்டோரின் நிலை குறித்து அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவிலேயே தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலங்களில் 2வது இடத்தில் இருக்கிறதாம் பீகார்.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. அம்மாநிலத்தைப் பொறுத்தவரையில் இதர பிற்படுத்தப்பட்டோர் தீர்மானிக்கும் சக்திகளாக இருந்தாலும் தாழ்த்தப்பட்டோரின் வாக்குகளும் கணிசமான பங்கு வகிக்கிறது.
பீகாரைப் பொறுத்தவரையில் அம்மாநில மக்கள் தொகையில் 1.79 கோடி பேர் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர். இதனால்தான் பீகாரை ஆளும் முதல்வர் நிதிஷ்குமார் ரூ10,000 கோடியை எஸ்.சி நலத் திட்டங்களுக்காக 2015-16ஆம் ஆண்டு ஒதுக்கியிருப்பதாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக இண்டியாஸ்பெண்ட் இணையதளம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:

2வது இடம்...
இருப்பினும் தேசிய அளவிலான புள்ளி விவரங்களின் அடிப்படையில் பீகாரில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர் நிலைமை என்பது மிக மோசமாகவே இருக்கிறது. குறிப்பாக இந்திய அளவில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான குற்றங்கள் அதிகம் (17%) பதிவாகி இருக்கும் மாநிலங்களில் 2வது இடத்தில் பீகார் இருக்கிறது.

90% வழக்குகள் நிலுவை...
2013ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி உத்தரப்பிரதேசத்தில் 7,078 (20%); பீகாரில் 6,721 குற்றங்கள் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக பதிவாகி இருக்கின்றன. ராஜஸ்தானில் 6,475 (16.4%) குற்றங்கள் பதிவாகி உள்ளன. இந்த குற்றங்களில் 90% வழக்குகள் பீகாரில் நிலுவையில்தான் இருக்கின்றன

பெண் குழந்தை கல்வி
தொடக்கப் பள்ளிகளில் சேரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் குறைவான மாநிலங்களில் பீகார் 4வது இடத்தில் இருக்கிறது. இதில் உ.பி, உத்தரகாண்ட், ராஜஸ்தான் முதல் மூன்று இடங்களில் இருக்கின்றன.

ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்
இதேபோல் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டங்களில் முழு ஈடுபாட்டுடன் பணிபுரியும் தாழ்த்தப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருக்கும் 2வது மாநிலமாக பீகார் உள்ளது. சத்தீஸ்கரில் இந்த எண்ணிக்கை 47.58%ஆக இருக்கிறது. ஆனால் பீகாரில் 16.04%; ஜார்க்கண்ட்டில் 6.34% ஆக உள்ளது.
இப்படி தாழ்த்தப்பட்டோரின் நிலை மிகவும் மோசமாக இருப்பதை அரசியல் பிரசார ஆயுதமாக்கினால் நிதிஷ்குமாருக்கு நெருக்கடிதான் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications