இனி குழாய் நீரை நேரடியாக குடிக்கலாம்.. அந்தளவு பாதுகாப்பாக இருக்கும்.. ஒடிசா அரசின் சூப்பர் திட்டம்
புபனேஷ்வர்: ஒடிசாவின் பூரி நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குழாய் நீர் நேரடியாகக் குடிக்கும் அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என்ற பேச்சு பரவலாகவே உள்ளது. அந்த நிலையை மாற்ற ஒடிசாவில் நவீன் பட்நாயக் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில், ஒடிசாவின் பூரி நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பான குழாய் நீர் இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பான குடிநீர்
இந்தியாவிலேயே நகர் முழுவதும் நேரடியாகக் குடிக்கும் அளவுக்குப் பாதுகாப்பான குழாய் குடிநீர் வசதியைக் கொண்ட முதல் நகர் என்ற சிறப்பையும் பூரி நகர் பெற்றுள்ளது. மேலும் கட்டாக், ரூர்கேலா, பெர்ஹாம்பூர் உள்ளிட்ட மேலும் 16 நகரங்களில் பாதுகாப்பான குடிநீர் குழாய் நீர் விநியோகத்தை உறுதி செய்ய ஒடிசா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் வாழும் சுமார் 40 லட்சம் பொதுமக்கள் பயன் பெறுவார்கள்.

சர்வதேச நாடுகளுக்கு இணையாக
இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "வரும் மார்ச் 2022க்குள் இத்திட்டத்தில் ஒடிசாவின் அனைத்து நகரங்களையும் இணைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவிலேயே இப்படியொரு திட்டத்தைச் செயல்படுத்தும் முதல் மாநிலம் ஒடிசா தான். வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர் போல ஒவ்வொரு வீட்டிற்கும் செல்லும் குழாய் நீரை நேரடியாக ஒருவர் குடிக்கும் அளவுக்குத் தரமானதாக வழங்குவது அரசின் நோக்கம். இது 24/7 ஹெல்ப்லைன் மையம், குறை தீர்ப்பு மையம், மொபைல் நீர் சோதனை ஆய்வகம், நீர் வழங்கல் புகார்களை விரைவாகச் சரி செய்யத் தனிக் குழு ஆகியவற்றை உள்ளடக்கிய திட்டமாகும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசு கடந்த 2019இல் ஜல் ஜீவன் மிஷன் என்ற திட்டத்தைத் தொடங்கியதில் இருந்து ஒடிசா அரசு தனது மாநிலத்தில் 41.14% கிராமப்புற குடும்பங்களுக்குக் குழாய் நீர் இணைப்பை வழங்கியுள்ளது. சுமார் 3.6 டிரில்லியன் ரூபாய் மதிப்பில் தொடங்கப்பட்டுள்ள ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் 2024க்குள் அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் குழாய் நீர் இணைப்பை வழங்க வேண்டும் என்பதே நோக்கமாகும்.

Drink From Tap திட்டம்
ஒடிசா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் "பூரி இப்போது சர்வதேச நகரங்களுக்கு இணையாகப் பாதுகாப்பான மற்றும் தூய்மையான நீரை வழங்குகிறது. இந்த நீரை நேரடியாகக் குழாய்களிலிருந்து நம்மால் குடிக்க முடியும். ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இன்று பூரி நகரவாசிகளுக்குச் சுத்தமான குடிநீரை வழங்கும் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். நகர்ப்புறங்களில் இருக்கும் அனைவருக்கும் குழாய் குடிநீர் இணைப்பு வழங்கிய பிறகு Drink From Tap திட்டத்தைக் கடந்த 2020 அக்டோபர் மாதம் ஒடிசா முதல்வர் தொடங்கி வைத்தார். 24 மணி நேரமும் சப்ளே செய்யப்படும் இந்த நீரை நேரடியாகக் குடிநீராகவும் சமையலுக்கும் பயன்படுத்தலாம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

ஒடிசா அரசு
இந்த ஆண்டு பட்ஜெட்டில் கூட குழாய் மூலம் நீர் வழங்கும் திட்டம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. 4378 நகரங்களில் இருக்கும் 2.68 கோடி மக்களுக்குப் பாதுகாப்பான நீரை வழங்க சுமார் 2.87 டிரில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஒடிசாவில் நேரடியாகக் குடிக்கும் அளவுக்கு தூய்மையான குழாய் நீரை வழங்கும் திட்டம், மதுரையைச் சேர்ந்த வி.கே.பாண்டியன் தலைமையிலான குழுவால் வெறும் 9 மாதங்களில் முடிக்கப்பட்டுள்ளது. 15 நகரங்களில் உள்ள 15 லட்சம் மக்களுக்குத் தரமான குழாய் குடிநீரை உறுதி செய்யவே இத்திட்டம் தொடங்கப்பட்டதாக ஒடிசா அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications