மாஸ்டர் மைண்ட்.. சல்லி சல்லியாக நொறுங்கிய காங்கிரஸ்.. ராஜஸ்தானில் வெல்ல பாஜக போட்ட பிளான் என்ன?
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில், அங்கு அக்கட்சி மேற்கொண்ட வியூகங்கள் என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
200 தொகுதிகளை கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில், காங்கிரஸ் வேட்பாளர் மறைவால் 199 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இது வரை வெளியான முடிவுகளின்படி பாஜக பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளுடன் முன்னிலை வகித்து வருகிறது. ராஜஸ்தானில் ஏறக்குறைய காங்கிரஸிடம் இருந்து பாஜக ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகி இருக்கிறது.

தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளின்படி ராஜஸ்தானில் காங்கிரஸ் வெல்லும் என்று கூறப்பட்ட நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக வெல்லும் என்று தெரிவித்தன. இதனை தற்போது தேர்தல் முடிவுகள் மெய்பித்து உள்ளன. தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளில் பின்னடைவில் இருப்பதாக கூறப்பட்ட பாஜக முன்னிலை பெற்றது எப்படி என்று விரிவாக பார்ப்போம். அம்மாநில பாஜகவில் வசுந்திரா ராஜே, தியா குமாரி, சதீஷ் பூனியா இடையேயான மோதலை கடந்து முதல்வர் வேட்பாளரையே அறிவிக்காமல் தேர்தலை சந்தித்தது.
மத்திய பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலும், ராஜஸ்தானில் பிரதமர் மோடி தலைமையிலும் தேர்தலை சந்திக்க பாஜக முடிவு செய்தது. மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மற்ற மாநில முதலமைச்சர்கள், மக்கள் செல்வாக்கு மிகுந்த தலைவர்கள், பிரபலங்கள் என பலரை களத்தில் இறக்கியது. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழு என மத்திய அமைச்சர்களையும், பாஜக மூத்த தலைவர்கள் தலைமையில் தனித்தனி குழுக்களை அக்கட்சி அமைத்தது.
பெண்கள் மற்றும் இந்துத்துவ வாக்குகள் சிதறாமல் இருக்கவும் பல்வேறு வியூகங்களை அக்கட்சி வகுத்தது. அதன் அடிப்படையில் பிராமண சமுதாயத்தை சேர்ந்த பாஜக எம்பி சந்திர பிரகாஷ் ஜோஷியை அம்மாநில தலைவராக தேர்வு செய்து அவர் தலைமையில் மாநில பாஜகவினர் பணியாற்றினர். இதன் மூலம் 7 சதவீத பிராமண மக்களின் ஆதரவை அக்கட்சி உறுதிபடுத்தியது. உதய்பூர் டெய்லர் கன்னையார் படுகொலையை கையில் எடுத்து இந்துக்களுக்கு காங்கிரஸ் ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என்று தொடர்ந்து பேசி வந்தது.
சுமார் 5 தொகுதிகளில் மக்கள் செல்வாக்கு கொண்ட சாமியார்கள், மடாதிபதிகளை வேட்பாளர்களாக நிறுத்தி மாநிலம் முழுவதும் உள்ள அவர்களின் பக்தர்களை தன்வசம் ஈர்த்தது. இது அல்லாமல் காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்கள் மத்தியில் இருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக தேர்தல் அறிக்கையில் பல விசயங்களை கொண்டு வந்தது. குறிப்பாக பெண்கள் பாதுகாப்பு, தேர்வுத் தாள் கசிவு, ஆண்டி ரோமியா படைகள் தொடர்பாக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி காங்கிரஸ் ஆட்சி மீது அதிருந்தி இருப்பவர்களின் வாக்குகளையும் பெற முயன்று அதில் வெற்றியும் பெற்று இருக்கிறது.












Click it and Unblock the Notifications