போன் போட்ட போதை இளைஞர்.. விர்ருனு ஸ்பாட்டுக்கு வந்து.. போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் போதை இளைஞருக்கு ஆதரவாக போலீஸ் ஏட்டுவை கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்கள பணியாளர்களான போலீசாரின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமான ஊரடங்கை மக்கள் மீறாத வகையில் கவனிக்கும் ஒரு பொறுப்பான பணியில் போலீசார் உள்ளனர்.
ஆனால் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு எதிராக கடந்த சில வாரங்களாக தாக்குதல் சம்பவம், போலீசாரை அவதூறாக பேசும் சம்பவங்கள் நடந்து வருகின்றன.

போலீசாருக்கு பாதுகாப்பில்லை
கேரள மாநிலத்தில் ஊரடங்கை மீறியவர்கள் வந்தவர்களை ஒரு காவலர் விசாரித்தார். அப்போது அதில் ஒருவர் காவலரின் தலையில் கல்லால் தாக்கினர். தற்போது அந்த காவலர் சுய நினைவே இழந்து பரிதாபமாக இருக்கிறார். தமிழ்நாட்டில் சென்னையில் போலீசாரை பெண் வழக்கறிஞர் ஒருவர் மிகவும் அவதூறாக பேசும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

போதை இளைஞர்
இவ்வாறு நாடு முழுவதும் பல இடங்களில் போலீசாரை மரியாதையைக் குறைவாக நடத்தப்பட்டு வரும் நிலையில் ராஜஸ்தான் மாநிலத்திலும் போலீசாரை எம்.எல்.ஏ. ஒருவரே தாக்கும் சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா மாவட்ட நகர் பகுதியில் தலைமை ஏட்டு மகேந்திர நாத் என்பவர் சக போலீசாருடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிளில் வந்த வந்த ஒரு இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அறைந்த பெண் எம்.எல்.ஏ.
அப்போது அளவுக்கு மிஞ்சிய மதுபோதையில் இருந்த அந்த இளைஞர் ஏட்டு மகேந்திர நாத் உள்ளிட்டவர்களை கண்டபடி திட்ட ஆரம்பித்தார். மேலும் அந்த இளைஞர், ராஜஸ்தான் சுயேச்சை பெண் எம்.எல்.ஏ. ரமில் காதியாவுக்கு போன் செய்தார். இதனை தொடர்ந்து உடனடியாக அங்கு வந்த எம்.எல்.ஏ. ரமில் காதியா, என்ன நடக்கிறது என்பதை அறியாமல் போதை இளைஞருக்கு ஆதரவாக, போலீசாரை அவதூறாக திட்ட ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற எம்.எல்.ஏ. ரமில் காதியா, தலைமை ஏட்டு மகேந்திர நாத் சட்டை காலரை பிடித்து இழுத்து அவரது கன்னத்தில் அறைந்துள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தலைமை ஏட்டு மகேந்திர நாத், எம்.எல்.ஏ. ரமில் காதியா மீது புகார் கொடுத்தார். அதன்பேரில் எம்.எல்.ஏ. மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் எம்.எல்.ஏ. ரமில் காதியா இந்த சம்பவத்தை மறுத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை. ஊரடங்கு கட்டுப்பாடு என்ற பெயரில் போலீஸ் ஏட்டு மக்களைத் துன்புறுத்துகிறார். பலரிடம் இருந்து பணம் வசூலிக்கிறார் என்று தெரிவித்தார் ரமில் காதியா.












Click it and Unblock the Notifications